ஊழல் அதிகாரிகள் – திருவண்ணாமலை
மாவட்ட நிர்வாகத்திற்கு பா.ஜ.க எச்சரிக்கை
திருவண்ணாமலை செப்.14- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க செயற்குழு கூட்டம் திருவண்ணாமலை அமுதா திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் கே.ரமேஷ்¸ ஆர்.சேகர்¸ எம்.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெ.எஸ்.செந்தில்குமார்¸ கடலூர் கோட்ட பொறுப்பாளர் எஸ்.குணசேகரன்¸ முன்னாள் மாவட்டத் தலைவர் நேரு மற்றும் பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அனைவருக்கும் வீடு திட்டம்¸ தனிநபர் கழிவறை¸ மகாத்மாகாந்தி வேலைவாய்ப்பு திட்டம்¸ ஜல் சக்தி அபியான் திட்டம்¸ பிரதம மந்திரியின் கிராம சாலைகள் இணைப்புத்திட்டம்¸ தூய்மை பாரத திட்டம் போன்ற திட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு காரணமாக இருக்கும் ஊராட்சி செயலாளர்கள்¸ வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது விசாரணை செய்து முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும்.
திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகிலுள்ள பழைய மருத்துவமனையை¸ ஆயுஷ் மருத்துவமனையாக மாற்றும் அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. இதை உடனடியாக செயற்பாட்டிற்கு கொண்டு வருமாறு மாவட்ட ஆட்சித் தலைவரை கேட்டுக்கொள்வது.
நெடுஞ்சாலை துறை¸ ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை¸ நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகள் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய சாலைகள் போடும்போது பழைய சாலைகளை பெயர்த்து எடுத்து பின்பே புதிய சாலைகள் போட வேண்டுமென கேட்டுக்கொள்வது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.