திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில்
1மாதமாக வளர்ச்சி பணிகள் முடக்கம்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2பிடிஓக்களும் திடீரென விடுமுறையில் சென்றதால் கடந்த 1மாதமாக வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளது. .
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் 69 ஊராட்சிகளை கொண்ட பெரிய ஒன்றியமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஒன்றியத்தில் மொத்தம் 26 ஒன்றிய கவுன்சிலர் பணியிடங்களில் அதிமுக 4 இடங்களிலும்¸ திமுக 15 இடங்களிலும்¸ பா.ம.க 2 இடங்களிலும்¸ தேமுதிக ஒரு இடத்திலும்¸ சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் திமுகவைச் சேர்ந்த கலைவாணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.
அவர் பதவியேற்று 9மாதங்கள் ஆகியும் இதுவரை திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் சொல்லத்தக்க அளவில் வளர்ச்சி பணிகள் ஏதும் நடைபெறவில்லை. ஒன்றிய பொதுநிதியிலிருந்து ஒரு ரூபாய்க்கு கூட பணிகள் நடைபெறவில்லை என்கின்றனர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள். அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்காக வந்தரூ.1கோடியே 29லட்சத்து 30ஆயிரத்தின் பெரும்பங்கையும் தலைவரே தன் இஷ்டத்திற்கு ஒதுக்கி கொண்டதால் அதிமுக¸ பாமக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவமும் நடத்தேறியது. ஊராட்சி ஒன்றிய நிதிதான் இந்த நிலை என்றால் மாவட்ட ஊராட்சி மூலம் செய்யப்படும் பணிகளுக்கான பில்களும் ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில் ஆணையாளர் தி.அண்ணாதுரை¸ வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ஆனந்தன் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக விடுமுறையில் சென்று விட்டனர். ஒருபக்கம் தலைவரின் கணவர் மிரட்டல்¸ இன்னொரு பக்கம் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து மிரட்டல்¸ மத்தளத்திற்கு 2பக்கமும் அடி¸ ஆளை விடுங்கப்பா என உடல்நிலை சரியில்லை என்பதை காரணமாக காட்டி 2பிடிஓக்களும் லீவில் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் வளர்ச்சி பணிகள் அனைத்தும் முடங்கியது. ஊராட்சி அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டன. முக்கியமாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளும் நடைபெறவில்லை. 1மாதமாக அதிகாரிகள் இல்லாததால் பொதுமக்கள் மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுபற்றி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் எடுத்துச் சென்றனர். ஆனால் பொறுப்பு அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. அதன்பிறகு தமிழக முதல்வர் வருகைக்காக மேலதிகாரிகளும் பிசியாகிவிட்டனர்.
இது குறித்து திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலுவின் கவனத்திற்கு திமுகவினர் கொண்டு சென்றனர். இதையடுத்து மேலதிகாரிகளை தொடர்பு கொண்ட அவர் உடனடியாக திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு பி.டி.ஓக்களை நியமிக்காவிட்டால் முதலமைச்சர் வரும் நேரம் போராட்டத்தில் இறங்க வேண்டியதிருக்கும் என கூறியதால் திகைத்து போன அதிகாரிகள் போராட்டம் வேண்டாம்¸ முதலமைச்சர் வந்து போன பிறகு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்தார்களாம்.
அதன்பிறகு ஆனந்தன் பணிபுரிந்து வந்த கிராம ஊராட்சி ஆணையாளர் பணியிடத்திற்கு கே.எம்.பழனி என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்றுக் கொண்டு நிலுவையில் உள்ள பைல்களில் கையெழுத்திட்டார். ஊராட்சி உதவி இயக்குநர் ஜி.அரவிந்த் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பி.டி.ஓ நியமிக்கப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மீண்டும் வழக்கமான பணிகள் துவங்கியுள்ளது.