மூடிய கண்ணாடி பெட்டிக்குள் இருதய அறுவை
சிகிச்சை செய்தவர் 45 நிமிடம் தியானம்
திருவண்ணாமலையில் இருதய அறுவை சிகிச்சை செய்த 61வயதான சினிமா தியேட்டர் அதிபர் மூடிய கண்ணாடி பெட்டிக்குள் 45நிமிடம் தியானம் செய்து அசத்தினார்.
திருவண்ணாமலை அருணாச்சலம் திரையரங்கின் உரிமையாளராக இருப்பவர் சரவணன்(61). தீவிர அண்ணாமலையாரின் பக்தர். இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள சரவணன் யோகா கற்றுக் கொண்டு விதவிதமாக யோகா செய்து அசத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றில் இருந்து உலக மக்கள் அனைவரும் விடுபட ஆணி படுக்கை மீது அமர்ந்து யோகாசனம் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கண்ணாடி பெட்டிக்குள் அவர் அமரும் நிகழ்ச்சி அருணாச்சலம் திரையரங்கில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அருணாச்சலம் ஆதீனம் என்னும் சரவணன் கண்ணாடி பெட்டிக்குள் சென்று அமர்ந்ததும் பெட்டியின் கதவுகள் மூடப்பட்டன. இருதய அறுவை சிகிச்சை செய்தவரான அவர் காற்றுப் புகாத பெட்டியில் சில நிமிடங்கள் மட்டுமே அமர்ந்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 நிமிடங்கள் அமர்ந்து பார்வையாளர்களின் ஹார்ட்பீட்டை எகிற வைத்தார்.
கண்ணாடி பெட்டிக்குள் இருந்து எழுந்து வந்த சரவணனின் நாடித்துடிப்பும் அவரை போல் சாதாரணமாக இருந்தது. இது குறித்து சரவணன் கூறுகையில் கரோனா நோய்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதனால் இந்நோயை விரட்ட முடியும் என்பதை வலியுறுத்தவே காற்றுப் புகாத கண்ணாடி பெட்டிக்குள் சுகாசனத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டேன் என்றார்.
இது ஜீவசமாதி அடைவது போன்று ஒரு கடினமான பயிற்சியாகும். ஒவ்வொரு நாளும் சிறிது¸ சிறிதாக நேரத்தை அதிகரித்து இந்த பயிற்சியில் சரவணனை தேர்ச்சி பெற வைத்தோம் என்றார் அவரது பயிற்சியாளரும்¸ சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங்க கழக நிறுவனருமான எஸ்.சுரேஷ்குமார்.
இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதியரசர் கிருபாநிதி தலைமை தாங்கினார்¸ மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் ஜி.குமார்¸ காரைக்கால் முன்னாள் சேர்மன் உதயகுமார்¸ ஆகியோர் முன்னிலை வகிக்க¸ ச.சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் ஸ்ரீ லட்சுமி நாராயணி பீடத்தைச் சேர்ந்த மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஹயத்பாஷா¸ திருவண்ணாமலை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ப.துரைசாமி¸ ஊட்டியை சேர்ந்த சிவக்குமார்¸ பொள்ளாச்சியை சேர்ந்த நிலக்கிழார் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொழிலதிபர் கே.நாசர் நன்றி கூறினார்.