கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள
கோவில் சொத்துக்கள் அபேஸ்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை குகை நமச்சிவாயர் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள இடங்களை அளவிடும் பணியை பார்வையிட வந்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனத் தலைவர் ஆ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸
குகை நமச்சிவாயர் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது போல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம். இடங்களை விட்டு கொடுத்த அரசு அலுவலர்கள் குறித்தும்¸ பின்னணியில் யார் இருக்கிறார்கள்?¸ போலி ஆவணங்கள்¸ கூட்டு சதி குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். இது ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்று விடும். பிறகு இடத்தை மீட்க சட்ட நடவடிக்கைகள் தொடங்கி விடும்.
அண்ணாமலையார் கோவில் சொத்துக்கள் குறித்த விவரங்கள் 5சதவீதம் கூட இந்து சமய அறநிலையத்துறை இணைய தளத்தில் வெளியிடப்படவில்லை. கட்டளை நிலங்கள்¸ குறித்த வகை தருமம்¸ அரசு புறம்போக்கு கோவில் வழிபாடு போன்ற நிலங்கள் குறித்து முறைப்படுத்தவில்லை. என்ன செய்ய வேண்டும் என அங்கிருக்கிற அலுவலர்களுக்கே தெரியவில்லை. தெரிந்து கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. தெரிந்து கொண்டால் வேலை செய்ய வேண்டும் என்பதால் அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
ஏனென்றால் உண்டியல் வருமானத்தை நம்பித்தான் இந்த அறநிலையத்துறை இயங்கி வருகிறது. உண்டியல் வருமானத்தில் நடக்கும் முறைகேடுகள் பற்றி தெரியவந்தால் நடுவீதியில் மக்கள் காறி துப்பி விடுவார்கள். அந்த மாதிரி சூழ்நிலை வருவதற்கு முன்பு தங்களை திருத்திக் கொண்டு திருக்கோவில் சொத்துக்களை மீட்க வருவார்களேயானால் அவர்கள் சந்ததியினர் நலமாக வாழ்வதை கண்கூடாக பார்க்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனத் தலைவர் ஆ.ராதாகிருஷ்ணன் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை மீட்க வேண்டும் என தொடர்ந்த வழக்கில் கோவில் சொத்துக்களை பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அறநிலையத்துறை ஆணையருக்கு கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இதே போல் கோவை பள்ள பாளையம் கிராமத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ.50கோடி மதிப்புள்ள 9.36 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர்¸ சிதம்பரம் நடராஜர் ஆகிய கோயில்களுக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்து அரசுக்கு தெரிவித்தவர்;. மேலும் கோர்ட்டு உத்தரவுபடி¸ கரூர் மாவட்டத்தில்¸ கோவில் இடத்தில் வழங்கப்பட்ட 350 பேரின் தனிப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்து ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 73 ஏக்கர் நிலத்தை மீட்டு மீண்டும் அந்த இடங்களை கோவில்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தவர். இப்படி பல கோவில் நிலங்களை மீட்டுத் தந்துள்ளார். மீட்கவும் வழக்குகளை தொடர்ந்துள்ளார்.
கோவில் இடங்களை யாராவது விற்றால் பொதுமக்கள் வாங்க கூடாது¸ அப்படி வாங்கினால் அந்த இடம் உடனடியாக மீட்கப்படும் என்று தெரிவித்த ராதாகிருஷ்ணன்¸ கோவில் இடம் ஆக்கிரமிப்பு குறித்து ஆதாரத்துடன் [email protected] என்ற மெயிலில் தெரிவித்தால் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஓரிரு மாதங்களில் அண்ணாமலையார் கோவில் இடங்களை மீட்க சட்ட நடவடிக்கை தொடங்கப்படும் என திருத்தொண்டர்கள் சபை அறிவித்திருப்பது அண்ணாமலை பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.