கிசான் திட்ட முறைகேடு
வெள்ளை அறிக்கை வெளியிட பாஜக கோரிக்கை
திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள உண்ணாமலை திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களுக்கு ராகவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸
இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சியை தயார் செய்வது குறித்தும்¸ கட்சி உள்கட்டமைப்பை பலப்படுத்துவது குறித்தும் விவாதித்துள்ளோம். திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட என்னவெல்லாம் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினேன்.
சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக எப்போதும் தயாராக உள்ளது. தனியாக போட்டியிட்டாலும் 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த தொகுதிகள் எவை¸ எவை என்பதை கண்டறிந்து விட்டோம். அந்த தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி கட்சி பணியை முடுக்கி விட்டுள்ளோம்.
தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார். கனவு காண்கின்ற உரிமை ஸ்டாலினுக்கு உள்ளது. தமிழக சமுதாயத்திற்கு துரோகத்தையே செய்து வரும் தி.மு.க.வை பொதுமக்கள் ஒரு காலத்திலும் ஆட்சி பொறுப்பில் அமர்த்தமாட்டார்கள்.
பாரத பிரதமர் மோடி பல நல்ல திட்டங்களை தீட்டி டிஜிட்டல் இந்தியா என கொண்டு வந்து நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் அதை கொண்டு சேர்த்து வருகிறார். இப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ்¸ ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது துரதிஷ்டவசமானது. இது சம்மந்தமாக மாநில அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சி.பி.சி.ஐ.டி விசாரணையில் சில பேர் கைது செய்யப்பட்டிருப்பது ஓரளவு திருப்தி அளித்தாலும்¸ இது போதாது¸ உடந்தையாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த திட்டத்தின் பயன் உண்மையானயானவர்களுக்கு போய் சேர வேண்டும். இந்த முறைகேட்டின் பின்னணியில் எவ்வளவு பெரிய மனிதர்கள் இருந்தாலும் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டிற்கு மத்திய அரசு விதிகளை தளர்த்தியதுதான் காரணம் என முதல்வர் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அரசின் திட்டத்தை அமுல் படுத்துவது மாநில அரசுதான். இந்த மோசடிக்கு யார் காரணமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என நாங்கள் எச்சரிக்கையுடன் பேசுகின்ற வேலையில் தமிழக முதல்வர் மத்திய அரசுதான் காரணம் என்று கூறியது கண்டிக்கத்தக்கது.
மோடி¸ குஜராத்தில் 13 வருடம் முதல்வராகவும்¸ அதன்பிறகு 6வருடங்கள் இந்திய பிரதமராகவும் ஊழலற்ற ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கு கூட அவர் மீது இல்லை. இப்படிப்பட்ட நிலையில் மத்திய அரசையோ¸ பாஜகவையோ குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
அதிமுகவுடன் எங்கள் கூட்டணி தொடர்கிறது. எதிர்காலத்தில் இதே கூட்டணி தொடர விரும்புகிறோம். மீண்டும் அதிமுக ஆட்சியை இந்த கூட்டணி உருவாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார்¸ மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். பாஜக மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் எஸ்.தணிகைவேல் உள்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.