வேங்கிக்காலில் பெருக்கெடுத்து ஓடும்
கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
திருவண்ணாமலை தென்றல் நகரில் கழிவுநீர் குட்டை போல் தேங்குவதாலும்¸ ரோட்டில் ஆறு போல் ஓடுவதாலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு இல்லாத கால்வாய் இருப்பதாக கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சியாகும். அதிக வருவாய் கொண்ட ஊராட்சியாக விளங்கி வருகிறது. இப்பகுதியில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்¸ மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்களும்¸ ஒருங்கிணைந்த நீதிமன்றம்¸ அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போன்றவைகளும் உள்ளன.
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் உள்ள தென்றல் நகர் 9 வது குறுக்குத் தெருவில்¸ வீடு கட்டிய காலத்திலிருந்து குடியிருப்புவாசிகளுக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தரப்படவில்லை. நாளுக்கு நாள் வீடுகள் அதிகரிக்கவே கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் ஒவ்வொரு வீடுகளின் முன்பு குட்டை போல் தேங்கி கிடக்கிறது. மேலும் இது நிரம்பி ரோடுகளிலும் வழிந்தோடுகிறது.
இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலருக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 5 வருடங்களாக தங்கள் பகுதிக்கு கால்வாய் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்து வருகின்றனர். அவர்கள் அளித்த மனுவுக்கு வந்த பதிலில் அங்கு கால்வாய் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லாத கால்வாய் ஆழப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் கால்வாய் கட்டப்பட்டவில்லை என புகைப்பட ஆதாரத்துடன் மனு அளித்தனர்.
ஆனால் இதற்கு எந்த வித பதிலுமில்லை. மேற்கொண்டு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது சம்மந்தமாக மீண்டும் மீண்டும் அவர்கள் கொடுத்த ஏராளமான மனுக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும்¸ ஊரக வளர்ச்சித்துறையிலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கழிவுநீர் வெளியேறுவதற்கான கால்வாயை ஏற்படுத்தி தராமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்குடன் செயல்பட்டு தங்களின் உயிரோடு விளையாடி வருவதாகவும்¸ தற்போது கொரோனா தொற்று நோய் பரவி வரும் நிலையில் கழிவு நீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு¸ மலேரியா பரவுமோ என்ற அச்ச உணர்வோடு தினமும் வாழந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு கால்வாய் கட்டாமலேயே பில் போட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்¸ தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.