திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்
பொதுமக்களுக்கு இலவச உணவு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களின் பசியாற்ற எந்த மாவட்டத்திலும் செய்யாத புது ஏற்பாடு ஒன்றை செய்துள்ளார் கலெக்டர் கந்தசாமி.
உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழை மக்களுக்கு பயன்படுத்து என்ற சொல்லுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி இம்மாவட்டத்தில் உள்ள ஏழைகளுக்கு அரசு பணி¸ பசுமை வீடு¸ அரசு நிதி வழங்கல் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
மாணவ-மாணவியர்களின் நலனில் அக்கறை செலுத்தி வரும் கலெக்டர் கந்தசாமிக்கு¸ பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாவட்டத்திற்கான விருதை கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது. இவரது முயற்சியினால் ஸ்மார்ட் வகுப்பறை¸ நவீன மேஜை¸ இருக்கை¸ ஏ.சி.வசதி என இம் மாவட்டத்தில் ரூ.10கோடியில் 35 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க தொலை தூரத்திலிருந்து வரும் மக்கள் மதிய உணவை மாலையில் வீட்டுக்கு சென்று சாப்பிடும் நிலை உள்ளதை அறிந்து அவர்களின் பசியாற்ற எந்த மாவட்டத்திலும் இல்லாத புது ஏற்பாடு ஒன்றை செய்துள்ளார்.
அதன்படி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலக வளாகத்தில் ரூ.12லட்சத்து 70ஆயிரத்தில் உணவு கூடம் கட்டப்பட்டுள்ளது. ‘இறைவனின் சமையலறை’ என்ற பெயரிடப்பட்ட அந்த உணவு கூடத்தை கலெக்டர் கந்தசாமி இன்று திறந்து வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும்¸ முதியவர்களுக்கும் இலவச உணவை வழங்கினார். முதல் நாளான இன்று தக்காளி மற்றும் தயிர் சாதம்¸ பகோடா¸ ஊறுகாய்¸ கேசரி வழங்கப்பட்டது.
மனு கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகள்¸ முதியவர்கள்¸ சிறு குழந்தைகளுக்கு திங்கட்கிழமை தோறும் இங்கு இலவசமாக உணவு வழங்கப்படும். 500 பேர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சிறப்பு முகாம் நடக்கும் நாட்களிலும் மதிய உணவு வழங்க வழங்கப்படும் என செய்தியாளர்களிடம் கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.
மாவட்டத்தின் கடைகோடியில் இருந்து மனு கொடுக்க வந்தவர்கள் வயிறார சாப்பிட்டு கலெக்டரை மனதார வாழ்த்தி விட்டு சென்றனர்.