‘மாணவர்களை தற்கொலைக்கு தூண்டாதே¸
நடிப்பு உனக்கு பிழைப்புடா¸ படிப்பு எமக்கு உயிரடா‘¸
நடிகர் சூர்யாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம்¸ ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்’ மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம்¸ மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என நடிகர் சூர்யா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். கோவையில் அவரது உருவ படத்தை கிழித்தும் காலில் மிதித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. பழனியில் சூர்யாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
திருவண்ணாமலை பகுதியில் கண்டன கோஷங்கள் முழுங்க இந்து இளைஞர் முன்னணி சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அடுத்த வெறையூர் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் முன்பு இந்து இளைஞர் முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். இந்து முன்னணி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ரா.அருண்குமார்¸ மாவட்ட செயலாளர் ஏ.எம். செந்தில் ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள்.
விதைக்காதே¸ விதைக்காதே¸ தேர்வு எழுதும் மாணவர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்காதே¸ சிதைக்காதே¸ சிதைக்காதே¸ தற்கொலை எண்ணத்தை தூண்டிவிட்டு மாணவன் வாழ்க்கையை சிதைக்காதே¸ நடிப்பு உனக்கு பிழைப்புடா¸ படிப்பு எமக்கு உயிரடா என்ற கோஷங்கள் முழுங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெறையூர் போலீஸ் நிலையம் அருகே திடீரென நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை பொதுமக்களும்¸ வியாபாரிகளும் பார்த்து எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது என ஆர்வத்துடன் விசாரித்து விட்டு சென்றனர்.
ஆர்ப்பாட்டம் முடிவில் பேசிய மாவட்ட பொதுச் செயலாளர் ரா.அருண்குமார் நடிகர் சூர்யா நடிப்பை மட்டுமே பார்க்க வேண்டும்¸ மாணவர்களின் மனதில் தன்னம்பிக்கை சிதைக்கும் விதமாக பேசி¸ வருங்காலத் தூண்களாக இருக்கும் மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்க கூடாது. நீட் என்ற வார்த்தைக்கான முழு விளக்கத்தையும் அவர் அளித்து விட்டு மற்ற விமர்சனங்களை முன் வைக்கட்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ராஜி¸ பூபதி¸ வெங்கடேஷ் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.