Homeஆன்மீகம்திருவண்ணாமலை:விஜயநகர பேரரசு கால சிவன் கோயில்-கண்டு கொள்ளாத அறநிலையத்துறை

திருவண்ணாமலை:விஜயநகர பேரரசு கால சிவன் கோயில்-கண்டு கொள்ளாத அறநிலையத்துறை




*மனோபலத்தை அளிக்கும் வீரட்டேஸ்வரர்

*குழந்தை பாக்கியம் தரும் அரசமரம்

*அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய 16 கால் மண்டபம்

திருவண்ணாமலை பகுதியில் உள்ள 

விஜயநகர பேரரசு கால சிவன் கோயிலின் சிறப்புகள் 

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்துள்ள இயற்கை எழில்  சூழ்ந்த எழும்பூண்டி எனும் எரும்பூண்டி கிராமத்தில் அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய விஜயநகர பேரரசு மன்னனின் போர்படை தளபதியால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த சிவன்கோயில் உள்ளது.  

இங்கு சிவபெருமான் அம்பாள் செழும்பாலீஸ்வரி உடன் வீரட்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரை மனசு சரியில்லாதவர்களும் விரும்பத்தகாத சம்பவங்களால் மனம் புண்பட்டவர்களும் மனநலம் பாதித்தவர்களும் இத்தலத்தில் உள்ள வீரட்டேஸ்வரரை வணங்கினால் கோழையையும் வீரனாக்கி மனோபலத்தை அருள்வார் என்பது இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை  நிறைவேற்றிக் கொள்கின்றனர். ஒருசிலர் அவரவர் வசதிக்கேற்ப செய்கின்றனர். 

குழந்தை பாக்கியம் தரும் அரசமரம்

இத்தலத்தின் மலைக்குன்றின்கீழ் அரச மரம் உள்ளது. இது மும்மூர்த்திகளின் அம்சமாக கருதப்படுகிறது. வேர்பகுதியில் பிரம்மாவும் நடுப்பகுதியில் திருமாலும் உச்சியில் சிவபெருமானும் வீற்றிருப்பதாக நம்பப்படுகிறது. இங்கு தலவிருட்சமாக அரசமரமும் சுனையே மகாதீர்த்தமாக உள்ளது. இந்த அரசமரத்தை குழந்தைகள் பாக்கியம் இல்லாத தம்பதிகள் திங்கட்கிழமை மற்றும் பவுர்ணமி அமாவாசை நாட்களில் சுற்றிவந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தின் ஐதீகமாக உள்ளது. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் தம்பதிகள் குழந்தை சமேதரமாக வந்து எடைக்கு எடை நாணயமாகவோ அல்லது பழங்களையோ செலுத்துகின்றனர். 

செம்மையான வாழ்வு தரும் செழும்பாலீஸ்வரி 

See also  அடியாருக்கு ஆதார் கார்டு தேவையில்லை- பொன்னம்பல அடிகள்

இந்த அம்மன் ஈடு இணையற்ற பேரழகுடன் அருள்பாலிக்கிறார். 16 செல்வங்களை தருபவராக இத்தலத்தில் வீற்றிருக்கிறார். மேலும் மனக்கவலை தீர பெண்கள் இங்கு வந்து எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றுகின்றனர். 

எழும்பூண்டி எரும்பூண்டி ஆனது எப்படி?

விஜயநகர மன்னனின் போர்படை தளபதியாக இருந்த ஒரு சிவபக்தன் சிவன்மீது அதிக பக்தி கொண்டு இருந்தான். இறைவனிடம் என்றும் உன் அருள்வேண்டும் என்று அழுது நீ வந்து செழிம்பால் தந்து காத்திடுவாய் போருக்கு சென்று வெட்டுபட்ட புண்ணோடும் வெற்றியோடு வீடு வந்து சேரும்போது உன்னை தொழும்போது எனக்கு துயர் நீங்க அம்மையும் அப்பனும் எழும்பூண்டி வாராயோ! என்று மனமுருக வேண்டினார். போர்தளபதியின் வேண்டுதலுக்கிணங்க அரச மர வேரிலிருந்து அம்மையும் அப்பனுமாக காட்சி கொடுத்து போருக்கு சென்ற அந்த வீரனுக்கு ஈஸ்வரன் வீரத்தையும் அம்பாள் செழிம்பாள் (சீம்பால்) கொடுத்து அருளினார். பின்னர் போரில் வெற்றிகண்ட தளபதி கோயில் கட்டி லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கினார். அம்பாள் செழிம்பாலை தந்து உடல் வலிமையை தந்ததினால் செழிம்பாலீஸ்வரி என்றும்¸ அரசமரத்தடியில் மறைந்திருந்த சிவபெருமானை எழுந்துவா என்று அழைத்ததால் இதைக் கேட்டு இறைவனும் எழுந்துவந்ததால் எழும்பூண்டி என்றும் காலப்போக்கில் இது மருவி எரும்பூண்டி ஆனது.

கோயிலின் முன் தலவிருட்சம் அரசமரத்தை வணங்கி மலையின்மேல் உள்ள மூலவரை தரிசிக்க 39 படிகளை கடந்து சென்றால் பலிபீடம் அடுத்து கொடிமரம் உள்ளது. இதன் அருகே நந்தியம்பெருமான் மூலவரை பார்த்தவாறு உள்ளார். இதன் எதிரே மிகப்பெரிய 16 கால் கல் மண்டபம் அழகிய சிறப்பு வேலைபாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. இடதுபக்கம் வள்ளி தெய்வாணை உடன் ஆறுமுகம் கொண்ட முருகன்¸ கடம்பன் இடும்பனுடன் உள்ளார். வலது பக்கம் சுயம்பு லிங்கம் செழிம்பாலீஸ்வரி சன்னதி உள்ளது. கோயிலைச் சுற்றி காலபைரவர்¸ பிரம்மா¸ லிங்கோத்பவர்¸ தட்சிணாமூர்த்தி¸ சண்டிகேஸ்வரர் உள்ளார். 

தொடர்புக்கு: ஆர்.ஏழுமலை¸ 9789352608

See also  மகாதீப விசேஷ படங்கள் டாப் வியூவில் தி.மலை நகரம்

எம்.சிவா¸ 7667422536

அர்ச்சகர் ஆர்.சண்முகம்¸ 8124619066  

அமைவிடம் : திருவண்ணாமலையிலிருந்து அவலூர்பேட்டை செல்லும் சாலையில் எரும்பூண்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது. 

– ப.பரசுராமன்

சிதிலமடைந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது?

கண்டுகொள்ளாத இந்து சமய அறநிலையத்துறை 

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 36ஆயிரத்தி 612 கோயில்கள் உள்ளன. அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல கோயில்கள் உள்ளன.  எரும்பூண்டி கிராமத்தில் 4 கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

போர்படை தளபதியால் கட்டப்பட்ட இக்கோயில் மொகாலய பேரரசு மன்னனின் படையெடுப்பின்போது சிதிலமடைந்து வெள்ளி தங்கம் நவரத்தினங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இக்கோயில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன் ஊர் மக்கள் ஒன்றுகூடி புதர்களை அகற்றி உழவார பணி மேற்கொண்டு வழிபாட்டுக்கு கொண்டு வந்தனர். இப்போது வீரட்டேஸ்வரருக்கு விரைவில் புனரமைப்பு பணி செய்ய திருப்பணிக்குழுவினர் மற்றும் ஊர்மக்கள் உத்தேசித்துள்ளனர். 

இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயிலாகும். இதன் செயல் அலுவலர் தேவராஜ் என்பவரிடம் கடந்த 2015ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் குறித்து மனு கொடுத்தனர். ஆனால் தேவராஜ் இதுவரை கோயில் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு 10 ஏக்கர் நிலம் உள்பட 4 கோயிலுக்கு 30 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அந்த இடங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஒரு சத்திரமே காணாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது.  

See also  அண்ணாமலையார் திருக்கல்யாணத்தின் சிறப்பு

இதுவரை கும்பாபிஷேகத்தையே கண்டிராத இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என சிவ பக்தர்கள் கடந்த 4 வருடமாக இம்மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் சென்னை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் என்று அலைந்தும் பயனில்லாமல் போனது. இந்து சமய அறநிலையத்துறை விதிகளின் படி உடனடியாக திருப்பணி செய்ய வேண்டியதும்¸ ஆகம விதிகளின்படி 12ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கோயில்கள் பட்டியலில் இக்கோயில் வந்தாலும் வருமானம் வரும் கோயில்களுக்கே அறநிலையத்துறை முக்கியத்துவம் தந்து வருவதால் இக் கோயில் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. 


இக்கோயிலின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் கோயில் உட்பிரகாரத்தை சுற்றி வர பக்தர்களுக்கு தடை விதித்துள்ள அறநிலையத்துறை திருப்பணிகள் விரைவில் நடைபெறும் என்ற அறிவிப்பு பலகையை வைத்ததோடு சரி. எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

சிவன் சொத்து குல நாசம்; என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ ¸ இல்லையோ¸ கோயில்களை புனரமைக்காமலும்¸ கோயில் சொத்துக்களை பாதுகாக்காமலும் உள்ள அறநிலையத்துறைக்கு பொருந்தும் என்பது பக்தர்களின் கருத்தாக இருக்கிறது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!