திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது குபேரன் நகர். இங்கு ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு 2வது தெருவில் திருவண்ணாமலை முன்னாள் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வனரோஜா மற்றும் அரசியல்வாதிகள்¸ அரசு ஊழியர்களின் வீடுகள் உள்ளது. இப்பகுதியில் ஆரம்பத்தில் இருந்து கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக நோய் பரவுதலை தடுக்க அங்கு கால்வாய் அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி வந்தனர். அந்த கோரிக்கைக்கு இப்போது செவி சாய்த்த திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தது.
இதனால் 2வது தெரு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்களது மகிழ்ச்சி நிலைக்கவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் புது ரூபத்தில் பிரச்சனை கிளம்பியது. அப்பகுதியில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு ரோட்டின் இருபுறங்களிலும் கால்வாய் அமைக்க வேண்டும் என ஒரு சில குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். இதனால் கால்வாய் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. அப்போது அந்தத் தெருவில் வசிக்கும் சில பெண்கள் ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்தனர். இதனால் கால்வாய் அமைக்கும் பணி மீண்டும் தடைபட்டது.
இது பற்றி முன்னாள் எம்.பி வனரோஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தன் கணவர் சண்முகத்துடன் அங்கு வந்தார். ஒப்பந்ததாரரை அழைத்து உங்களுக்கு என்ன வேலை ஒதுக்கப்பட்டதோ அந்த வேலையை செய்யுங்கள். யார் தடுத்தாலும் நிறுத்தாதீர்கள் என கால்வாய் அமைப்பதற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதற்கு அங்கிருந்தவர்கள் அந்த தெருவில் குடியிருக்கும் திருவண்ணாமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் சிலர் பணியை தடுப்பதாக தெரிவித்தனர். அவரது கணவர் ஜேசிபிக்கு முன்னாள் நின்று கொண்டிருந்த பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவருக்கு ஆதரவாக வந்த பெண்கள் கால்வாய் அமைக்கும் பணியை ஏன் தடுக்கிறீர்கள் என கூறி எதிர்ப்பு தெரிவித்த பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி பெண்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். இதில் ஒரு பெண்ணுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர் தமிழரசியின் மகள் சிநேகா¸ இந்த தெருவில் 20அடி ரோடே இல்லை. மின் கம்பம் உள்ள எதிர்புறத்தில் கால்வாய் அமைத்தால் ரோட்டின் அகலம் குறையாது. மக்களுக்காகத்தான் கால்வாய் அமைக்கப்படுகிறது. ஆனால் அதில் பயன் இல்லை என்றால் எப்படி ஏற்றுக் கொள்வோம். எனவே கழிவு நீர் செல்ல ஏதுவாக தாழ்வான பகுதியில்தான் கால்வாய் அமைக்க வேண்டும். இதை பொருட்படுத்தாமல் அரசு அலுவலர்கள் இல்லாமல் அரசியல்வாதிகள் வலுகட்டாயமாக மேடான பகுதியில் கால்வாய் அமைக்க முயற்சிப்பதை எதிர்க்கிறோம் என்றார்.
இந்நிலையில் இன்று மாலை மீண்டும் கால்வாய் அமைக்கும் பணி தொடங்க முயற்சி நடைபெற்றதை பார்த்து இருதரப்பினரும் அப்பகுதியில் திரண்டனர். அப்போது கால்வாய் அமைக்க கூடாது என திடீரென ஒரு பெண் தன் உடம்பின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர்.