தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் என்ற அமைப்பை நடத்தி வரும் வழக்கறிஞர் வேலூர் இப்ராஹிம்¸ பா.ஜ.கவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ¸ பி.எப்.ஐ போன்ற இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய வேண்டும் எனவும்¸ குடியுரிமை திருத்த சட்டம்¸ தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை எனவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர். அவரது பேச்சுகள் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை சம்பாதித்தன. வீட்டை அபகரிக்க முயன்றதாக அவர் மீது அவரது உறவினர் ஒருவர் புகார் கொடுத்ததிலும்¸ தன் மீது கத்தி குத்து நடத்த முயன்ற சம்பவத்தின் பின்னாலும் இஸ்லாமிய அமைப்புகள் செயல்பட்டு வருவதாக வேலூர் இப்ராஹிம் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் நல சட்ட திட்டங்களை விளக்கி குமரி முதல் மெரினா வரை தொடர் பிரச்சார யாத்திரையை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இப்ராஹிம் மேற்கொண்டுள்ளார். 30ந் தேதி சென்னையில் இந்த யாத்திரையை பா.ஜ.க தலைவர் முருகன் முடித்து வைக்கிறார்.
22வது மாவட்டமாக திருவண்ணாமலைக்கு வந்த இப்ராஹிம் முஸ்லீம்கள் நிறைந்த பகுதியான திருவள்ளுவர் சிலை அருகே இன்று காலை பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் மற்றும் ஆயுதப்படை போலீஸ்¸ உள்ளுர் போலீஸ் என 45 பேர் கொண்ட போலீஸ் படை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நேற்று இரவு அண்ணாமலையார் கோயிலுக்கு சென்ற இப்ராஹிம் அங்கு சிவாச்சாரியார்களை சந்தித்து கோவில் வரலாறு¸ நடைபெறும் விழாக்கள் மற்றும் வழிபாடுகள் குறித்து கேட்டறிந்தார். அவரது வருகையையொட்டி போடப்பட்டிருந்த பலத்த போலீஸ் பாதுகாப்பை பார்த்து யார் வந்திருக்கிறார்கள் என தெரியாமல் பக்தர்கள் விழித்தனர். பிறகு இஸ்லாமியர் ஒருவர் இந்து கோயிலுக்கு வந்திருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு சென்றனர்.