திருவண்ணாமலையில் அதிரடி காட்டிய பா.ஜ.க
விரைந்து வந்து மனு வாங்கிய கலெக்டர்
பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் நடைபெற்ற மோசடி குறித்த மனுவை பெற திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லாததால் பாரதிய ஜனதா கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கிசான் சம்மான் எனப்படும் பிரதம மந்திரி வேளாண்மை நிதி உதவி திட்டத்த்தின் கீழ் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது குறித்து சிபிசிஜடி விசாரணை நடத்தி வருகிறது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தியுள்ள இத்திட்டத்தில் நடைபெற்ற மோசடிகளை கண்டித்து பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர்களிடம் புகார் மனு அளிக்கும் போராட்டம் கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
ஆனால் திருவண்ணாமலையில் திங்கட்கிழமை பாஜகவினர் மனு அளிக்கவில்லை. இன்று காலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் திரண்டனர். பிறகு திருவண்ணாமலை – வேலூர் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அங்கு வரவே போராட்டத்தை கைவிட்ட பாஜவினர் அவரிடம் மனு அளித்தனர்.
அதில் பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் கடலூர்¸ விழுப்புரம்¸ திருவண்ணாமலை¸ கள்ளகுறிச்சி¸ காஞ்சிபுரம்¸ வேலூர்¸ கரூர்¸ கோவை போன்ற மாவட்டங்களில் இந்த ஆண்டு திடீரென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 40¸000 பேர்¸ 30¸000 பேர் என்று புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே வங்கியில் 300 பேர்¸ 400 பேர் என்று தவறான நபர்கள் உதவி பெற்று வருகிறார்கள். விவசாயிகள் அல்லாத பல்லாயிரக்கணக்கானோர் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய மோசடியாகும். இணையதளத்தில் பதிவு செய்ய அரசு மேற்கொண்டுள்ள வழிகளை தவறுதலாக கையாண்டு அரசாங்கத்தை ஏமாற்றி¸ சிலர் விவசாயிகள் அல்லாதாவர்களுக்கு இந்த உதவித்தொகையை பெற்றுத் தருகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.
எனவே இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்பெறுவோர் பற்றிய கணக்கெடுப்பை மாநில அரசு மிகத்தெளிவாக பரிசீலனை செய்து¸ இந்த தொகை உரிய விவசாயிகளுக்கு கிடைக்கிறதா அல்லது பல இடங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்று இருக்கிறதா என ஆராய வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்துக்கு பாஜக விவசாய அணி மாவட்டத் தலைவர் ஆர்.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி செயலாளர் மோகன்¸ மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச் செயலாளர் கே.ரமேஷ்¸ துணைத் தலைவர் எம்.முருகன்¸ மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் புகழ் மூவேந்தன்¸ மாவட்ட மகளிர் அணி தலைவி செயலாளர் பானுநிவேதிதா¸ மாவட்ட பாஜக செயலாளர்கள் ஏ.வெங்கடேசன்¸ குப்புசாமி¸ மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் வினோத்குமார்¸ மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் புகழ் மூவேந்தன்¸ ஓபிசி பிரிவு செயலாளர் சிவாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து பாஜக விவசாய அணி மாவட்டத் தலைவர் ஆர்.பிரகாஷ் கூறியதாவது¸
திங்கட்கிழமை மனு அளிக்க வந்த போது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இல்லை. முதலமைச்சர் வருகைக்காக பிசியாக இருப்பதாக கூறினார்கள். இன்று வந்த போதும் ஆட்சியரை சந்திக்க முடியவில்லை. இதனால் சாலை மறியல் செய்தோம். மாவட்ட ஆட்சியர் வந்து மனுவை பெற்று உரிய விசாரணை நடத்துவதாக தெரிவித்தார். இந்த மோசடியில் இடைத்தரகர்களைதான் போலீசார் கைது செய்துள்ளனர். வேளாண் துறையின் மெயில் ஐடி¸ பாஸ்வேர்டு இடைத்தரகர்களுக்கு எப்படி தெரியும்? அதிகாரிகளின் துணையோடுதான் இந்த மோசடி நடைபெற்றுள்ளது. எனவே அதிகாரிகளை பணி நீக்கம் செய்து விசாரிக்க வேண்டும். தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல்லில் பாஜகவினர் ஊர்வலமாக வந்து மனு அளித்த நிலையில் திருவண்ணாமலையில் பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.