அண்ணாமலையார் கோவிலில் யானை இல்லையா?
எனது கவனத்திற்கு வரவில்லை- தமிழக முதல்வர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 23 ஆண்டுகளாக உற்சவங்களில் பங்கேற்று பக்தர்களை ஆசீர்வதித்து வந்த யானை ருக்கு 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ந் தேதி நள்ளிரவு திடீரென உயிரிழந்தது. நாய் விரட்டியதால் மிரட்சியடைந்து ஓடிய யானை ருக்கு இரும்பு தடுப்பில் மோதி உயிரிழந்தது விட்டதாக ஒரு கதை சொல்லப்பட்டது.
ஆரோக்கியமாக இருந்த ருக்கு திடீரென உயிரிழந்தது பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது. யானையின் சாவில் மர்மம் இருப்பதாகவும்¸ இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் விசாரணையும் நடத்தப்படவில்லை¸ மர்மமும் விலகவில்லை. இதையடுத்து புதிய யானையை அண்ணாமலையார் கோவிலுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் தரப்பில் வைக்கப்பட்டது.
இந்த மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இருப்பதால் புதிய யானை வந்து விடும் என பக்தர்கள் நம்பிக்கை வைத்து காத்திருந்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருவண்ணாமலைக்கு வரும்போதெல்லாம் யானை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கடைசியாக தமிழக முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் யானை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதற்கேற்றாற்போல் புதிய யானை வாங்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து அதிகாரிகள்¸ சிவாச்சாரியார்கள் கொண்ட குழுவினர் பெங்களுர் சென்று முகாமிட்டு யானை குட்டிகளை பார்த்து ஆய்வு செய்து வருவதாக தகவல் பரப்பப்பட்டது. ஒவ்வொரு முறை தீபத்திருவிழாவிற்கு யானை வந்து விடும் என பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்¸ 2வருடமாக யானை வந்தபாடில்லை.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் யானை இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி¸ அண்ணாமலையார் கோவிலில் யானை இல்லாதது குறித்து எனது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும்¸ அரசு பரிசீலித்து யானை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதன் மூலம் இம்மாவட்டத்தைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் யானை இல்லாத விவரத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லாதது தெரிய வந்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 1995ம் ஆண்டு¸ அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கிய யானை ருக்குவின் இடத்தில் வேறொரு யானையை இப்போதைய முதல்வர் எடப்பாடி மூலம் வழங்க அமைச்சர் ஆர்வம் காட்டாதது ருக்கு இறந்தது போல் மர்மமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர் சிவபக்தர்கள்.