Homeசுகாதாரம்புதிய பஸ் நிலையம் அமைக்க குப்பைகள் அகற்றம்

புதிய பஸ் நிலையம் அமைக்க குப்பைகள் அகற்றம்

திருவண்ணாமலை ஈசான்யத்தில் புதிய பஸ் நிலையம்

குப்பைகள் அகற்றும் பணி துவக்கம் 


திருவண்ணாமலை நகராட்சி¸ சிறப்பு நிலை நகராட்சியாக விளங்கி வருகிறது. 13.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நகராட்சியில் 39 வார்டுகளில் 1லட்சத்து 45ஆயிரத்தி 278 மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் அருணாசலேஸ்வரர் கோயில் மற்றும் சிறிது தொலைவில் சாத்தனூர் அணை¸ ஜமுனாமரத்தூர் போன்ற பகுதிகள் இருப்பதால் இந்நகரம் சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது. 

இதனால்¸ இங்கு நாள் தோறும் பக்தர்கள்¸ சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும் தற்போதுள்ள மத்திய பஸ் நிலையத்தில் தினமும் 670 பஸ்கள்¸ 1¸913 முறை வந்து செல்கிறது. ஆனால் இந்த பஸ் நிலையத்தில் 50 பஸ்களை மட்டுமே நிறுத்த முடியும். எனவே புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013ம் ஆண்டு அறிவித்தார். 

இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையம் அமைக்க 13.76 ஏக்கர் உள்ள திருவண்ணாமலை ஈசான்ய மைதானம்¸ 9.38 ஏக்கர் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் பின்புறம் என 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்காக 2018ம் ஆண்டு திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைபிள்ளை மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கந்தசாமி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆனால் திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க ஏற்கனவே முடிவுகள் எடுக்கப்பட்டு விட்ட நிலையில் கருத்து கேட்பு கூட்டம் கண்துடைப்புக்காக நடத்தப்படுவதாக அப்போதே விமர்சனங்கள் எழுந்தது. 

இதை மெய்பிக்கும் வகையில் திருவண்ணாமலை நகராட்சியின் அறிக்கை அமைந்தது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில்¸ புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.30.15 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும்¸ தற்போது ஈசான்யம் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும்¸ இங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நவம்பர் 25ம் தேதிக்குள் திருவண்ணாமலை நகராட்சியின் இணையதளத்தில் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. அதன்படி எத்தனை பேர் ஆட்சேபனை தெரிவித்தார்கள் என்ற விவரத்தை நகராட்சி இதுவரை வெளியிடவில்லை. 

புதிய பஸ் நிலையம் அமைய உள்ள திருவண்ணாமலை ஈசான்யத்தில் அமைந்திருக்கும் நகராட்சி உரக்கிடங்கில்¸ நகரில் ஒவ்வொரு நாளும் 60 டன் குப்பையும்¸ தீபத் திருவிழா¸ பௌர்ணமி கிரிவலம் நாட்களில் சுமார் 120 மெட்ரிக் டன் முதல் 270 மெட்ரிக் டன் வரை குப்பையும் சேகரிக்கப்பட்டு வருகிறது.  கடந்த 60வருடங்களில் சேகரிக்கப்பட்ட 54ஆயிரம் டன் குப்பைகள் இங்கு தேங்கி கிடக்கிறது. 

இந்நிலையில் இங்குள்ள குப்பைகளை மண்ணாக்கி அதன் தரத்திற்கு ஏற்றாற்போல் விவசாய பயன்பாட்டிற்கும்¸ பள்ளமான பகுதிகளை சீர்படுத்தவும்¸ எரியாத பொருட்களின் கழிவுகளை சர்க்கரை ஆலை¸ சிமெண்ட ஆலைகளின் எரிபொருள் பயன்பாட்டிற்காகவும் அனுப்பும் வண்ணம் பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக ரூ.1கோடியே 25லட்சத்தில் புதியதாக நவீன ரக மிஷின் வாங்கப்பட்டுள்ளது. இந்த மிஷின் குப்பைகளை அரைத்து மண்ணாக்கி வருகிறது. 

இப்பணிகளை கலெக்டர் கந்தசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் 6மாதத்திற்குள் இப்பணி முடிவடையும் என தெரிவித்தார். குப்பைகள் முழுவதும் அகற்றி விட்ட பிறகு இந்த இடத்தை சிவில் பயன்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். புதிய பஸ் நிலையம் கட்டப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. நில மாசுபடுவதையும்¸ நிலத்தடி நீர் மாசுபடுவதையும் தடுக்கும் வகையில் குப்பைகள் அகற்றப்படுவதாகவும் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான ஆயத்த பணியாகவே இது பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் திருவண்ணாமலைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மக்கள் விரும்பும் இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என கூறியுள்ளதாகவும்¸ ஒரு இடத்தை குறிப்பிட்டு சொல்லியிருப்பதாகவும்¸ அது அரசு பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் திருவண்ணாமலை ஈசான்யத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!