திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு
ரூ.77லட்சம்¸ 266கிராம் தங்கம், 561கிராம் வெள்ளி வரவு
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இத் தலம் நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கி வருகிறது. இங்கு கோயிலுக்கு பின்னால் அமைந்திருக்கும் மலையானது பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இந்த மலையையே சிவபெருமானாக கருதி ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும்¸ தீபத்திருவிழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை வலம் வருகின்றனர்.
அண்ணாமலையாரை வேண்டினால் குழந்தை வரம் கிடைக்கும்¸ வியாபாரம் விருத்தியாகும்¸ உத்தியோக உயர்வு கிடைக்கும்¸ நோய்கள் நீங்கும்¸ துன்பங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுகிறவர்களும்¸ வேண்டுதல் நிறைவேறியவர்களும் உண்டியல் காணிக்கை செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்ததும் இந்த உண்டியல்கள் திறந்து எண்ணப்படும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலும் திறக்கப்பட்டு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கிரிவலம் செல்ல விதித்திருந்த தடை தொடர்ந்தது. இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று காலை அண்ணாமலையார் கோயிலில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் ஜான்சிராணி¸ மேல்மலையனூர் உதவி ஆணையர் ராமு¸ கண்காணிப்பாளர்கள் வேதமூர்த்தி¸ பத்ராச்சலம் ,ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.
கிரிவல பாதை உண்டியலை தவிர்த்து கோயிலுள்ள அனைத்து உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டன. கோயில் ஊழியர்கள்¸ தன்னார்வலர்கள்,சிவனடியார்கள் என 50க்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.77லட்சத்து 59ஆயிரத்தி 894ம்¸ 266கிராம் தங்கமும்¸ 561கிராம் வெள்ளியும் கிடைத்தது. இது தவிர வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.பவுர்ணமி கிரிவலம் வர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் காணிக்கை ரூ.1கோடியை தாண்டியிருக்கும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.