தங்கை எஸ்.பி.சைலஜா, உறவினர்கள் ஏற்றினர்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட விரும்பிய தலம்.ஆன்மா முழுமையாக சாந்தி அடையும்
-கலெக்டர் கந்தசாமி
மறைந்த பிரபல பின்னணி பாடகர்¸ நடிகர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 25ந் தேதி மறைந்தார். சென்னை தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 26ந் தேதி அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அன்றைய தினமே அவரது ஆன்மா சாந்தி அடைய இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலை வந்து ரமணாசிரமத்தில் மோட்ச தீபம் ஏற்றினார். இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் காரிய நிகழ்ச்சி முடிந்து 3வது நாள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அவரது தங்கை எஸ்.பி.சைலஜா குடும்பத்தாருடன் வந்து நேற்று (8-10-2020) மாலை 6 மணிக்கு மோட்ச தீபம் ஏற்றினார்.
உடலிலிருந்து உயிர் விடுதலை பெற்று இறைவனடி சேர்வதை மோட்சம் எனப்படுகிறது. வானுலகம் செல்லும் உயிருக்கு நற்கதி கிடைக்க இறைவனுக்கு ஏற்றப்படும் தீபமே மோட்ச தீபமாகும். இந்த மோட்ச தீபம் சிவன் மற்றும் பெருமாள் கோயிலில்களில் கோபுர உச்சயில் மாலை நேரத்தில் ஏற்றப்படுவது வழக்கம்.
ஆனால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கோபுர உச்சயில் மோட்ச தீபம் ஏற்றச் சென்றவர் கால் தவறி விழுந்து விடவே கடந்த 8 வருடங்களாக கோபுர உச்சியில் மோட்ச தீபம் ஏற்றப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கு பதில் அண்ணாமலையார் சன்னதிக்கு முன் சிறிய நந்திக்கு முன்புறமுள்ள சரவிளக்கு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் இங்குதான் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக அவரது உறவினர்கள் சார்பில் ரூ.1500 கட்டணம் செலுத்தப்பட்டது.
முதலில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்; தங்கை எஸ்.பி.சைலஜா கோயில் சிவாச்சாரியார் கீர்த்திவாசன் வழிகாட்டுதலோடு மோட்ச தீபம் ஏற்ற அதைத் தொடர்ந்து பாடகர் மனோ¸ கலெக்டர் கந்தசாமி¸ சைலஜாவின் கணவரும்¸ சின்னத்திரை நடிகருமான சுபலேக சுதாகர் மற்றும் உறவினர்கள் தீபம் ஏற்றினர். அப்போது பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம்¸ எஸ்.பி.சைலஜா¸ மனோ ஆகியோர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பக்தி பாடல்களை பாடி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து அண்ணாமலையார்¸ உண்ணாமலையம்மன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அங்கு பெரிய மடக்கு மற்றும் சரவிளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. மோட்ச தீபம் விடியற்காலை வரை எரியும்.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் கந்தசாமி திருத்தலங்களில் அதிக பாடல்களை கொண்ட தலமான அண்ணாமலையார் கோயிலை பற்றி அதிகமாக பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 2011ம் ஆண்டு இங்கு நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா மகாதீபம் ஏற்றும் நிகழ்வில் பக்தி பாடல்களை பாட விரும்பினார். ஆனால் அந்த வாய்ப்பு நிறைவேறாமல் போனது. 2017ம் ஆண்டு அந்த வாய்ப்பு நிறைவேறியது. அப்போது அவர் 2 மணி நேரம் பாடல்களை பாடி பக்தி பரவசத்தை ஏற்படுத்தினார். அவராக கேட்டு பாட வந்த தலம் இது. இங்கு அவருக்கு மோட்ச தீபம் ஏற்றினால் முழுமையாக அவரது ஆன்மா சாந்தியடையும் என்றார்.
இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த்¸ நடிகர் மயில்சாமி மற்றும் உள்ளுர் இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.