ரூ.1 கோடி இடம் அபகரிப்பு – கிராம
சிப்பந்திகள் செய்த முறைகேடு அம்பலம்
திருவண்ணாமலை பகுதியில் ரூ.1கோடி மதிப்புள்ள இடத்தை முறைகேடாக அபகரித்த 2 கிராம சிப்பந்திகள் மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த அரட்டவாடி பகுதியில் உள்ள பத்தியா தண்டா¸ குண்டன் தண்டா ஆகிய ஊர்களில் 300க்கும் மேற்பட்ட லம்பாடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரை 250 வருடங்களுக்கு முன்பு பத்தியா என்பவர் உருவாக்கியதால் அவர் பெயரிலேயே ஊரின் பெயரும் அமைந்தது.
பத்தியாவின் மகன்கள் மிச்சா நாயக்¸ ராமசாமி நாயக்¸ சந்து நாயக்¸ கோவிந்த் நாயக் ஆகியோரும் இறந்து விட அவரது வாரிசுகள் மற்றும் உறவினர்கள் என தற்போது 4வது தலைமுறையினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில் மிச்சா நாயக்கின் மகனும்¸ கிராம சிப்பந்தியாகவும் உள்ள குப்பன் என்பவர் தனது வாரிசுதாரர்களுக்கு மட்டும் இடத்தில் உரிமை உள்ளது போல் சிட்டாவில் தன் அதிகாரத்தை பயன்படுத்தி பெயர் சேர்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக்தில் இன்று கிராம சிப்பந்தி குப்பன் மீது புகார் மனு அளித்தனர். அதில் சிட்டாவில் விடுபட்டவர்களின் பெயரை சேர்க்க வேண்டும் எனவும்¸ பொரசப்பட்டில் குப்பன் அபகரித்து வைத்துள்ள 1 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டிட வேண்டும் எனவும்¸ அரசு திட்டங்களை பெற்றுத் தர அவர் பெற்றுள்ள லஞ்சப்பணத்தை திரும்ப வாங்கித் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதே போல் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் எம். சம்பத் என்பவர் கொடுத்துள்ள மனுவில் திருவண்ணாமலை அடுத்த புதுப்பாளையம் அருகே உள்ள கனகசமுத்திரம் கிராமத்தில் கிராம சிப்பந்தியாக இருக்கும் பழனி என்பவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தை தன் பெயரிலும்¸ குடும்பத்தினர்; மற்றும் இறந்து போனவர்கள் பெயரிலும்¸ குழந்தைகள் பெயரிலும்¸ அரசு ஊழியர்கள் பெயரிலும் என 44 பட்டாக்களை பெற்று அரசை ஏமாற்றியுள்ளார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து இடத்தை மீட்டு அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளர்.
யார்?யார்?பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை சம்பத்¸தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து கிராம சிப்பந்தி பழனியிடம் கேட்டதற்கு 2004ம் ஆண்டு இந்த பட்டாக்கள் கொடுக்கப்பட்டது. அப்போது நான் அரசு பணியில் இல்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும்¸ குழந்தைகள் பெயரிலும் பட்டா வழங்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது என்றார்.
2004ல் வழங்கப்பட்டா பட்டாக்கள் கடந்த 6வது மாதம்தான் அரசு கணக்கில் ஏற்றப்பட்டதாக தகவல்பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைகேடுகள் குறித்து விசாரிக்காமல் அவசரம் அவசரமாக அரசு கணக்கில் ஏற்றப்பட்டதில் பணம் விளையாடி இருப்பதாகவும்¸ இது குறித்து அரசு விரிவாக விசாரணை நடத்தி முறைகேடுகளுக்கு துணை போனவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்¸ இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்தியா தண்டா¸ குண்டன் தண்டா பகுதியில் ரூ.50லட்சம், கனகசமுத்திரத்தில் ரூ.50 லட்சம் என ரூ.1கோடி மதிப்புள்ள இடம் அபகரிக்கப்பட்டதில் கிராம சிப்பந்திகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.