ஏற்கனவே கொரோனா பயத்தில் வாழ்ந்து வரும் தாங்கள் ஊருக்குள் சரக்கு கடை வேறு திறக்கப்பட்டதால் தினமும் அச்சத்தோடு வாழ்ந்து வருவதாக கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பெண்கள் புலம்பி தீர்த்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் ஊத்துக்குளம் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்ற கோரி நீண்ட நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர். இது சம்மந்தமாக பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளனர். மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்த்திருந்த வேலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல் அந்த கடையை மாற்றி ஊருக்கு நடுவில் மாற்றி அமைத்தனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் சரக்கு கடையை கடந்து சென்றுதான் பள்ளிக்கு செல்ல வேண்டும். மேலும் பெண்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றாலும் அந்த கடையை கடந்துதான் செல்ல வேண்டும். இதனால் குடிமகன்களால் அவர்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. மேலும் குடிமகன்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை அங்கேயே வீசி விட்டு செல்வதால் முக்கிய வீதி அசுத்தமாக காட்சியளிக்கிறது.
நிம்மதியை குலைக்கும் அந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஊராட்சிமன்றத் தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்களும்¸ மாணவ-மாணவியர்களும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். அங்கு கலெக்டர் மனு வாங்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
பிறகு துணை ஆட்சியர்கள் மந்தாகிணி¸ அஜிதாபேகம் ஆகியோரிடம் மனுவை அளித்து டாஸ்மாக் கடையால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி தெரிவித்தனர். பிறகு செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில் ஏற்கனவே மதுவுக்கு எங்களது கணவர்கள் அடிமையாகி விட்ட நிலையில் எங்களது பிள்ளைகளும் சீரழிந்து விடுவார்களோ என நித்தம்¸ நித்தம் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொரோனாவை விட இந்த மதுக்கடையால் ஏற்படும் அச்சுறுத்தலே அதிகமாக உள்ளது என்றனர்.
இதே போல் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பாடகம் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை குடியிருப்பு மற்றும் பேருந்து நிறுத்தம் பகுதியில் இயங்கி வருவதால் அந்த கடையை அகற்றக்கோரி ஊர்மக்கள் பலமுறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடி மகன்கள் மதுவாங்கி சாலைகளிலேயே அமர்ந்து அருந்துவதால் பெண்கள் வெளியில் வருவதற்கே முடியாத நிலை உள்ளது.
இதையெல்லாம் பார்க்கும் போது, பெரிய அளவில் மக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய மதுக்கடைகள் திறக்கும் அரசு¸ மதுக்கடைகளால் மக்களின் மதிப்புள்ள வாழ்வு சீரழிகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். டாஸ்மாக் கடை தங்கள் பகுதிக்கு வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்துவது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது பற்றியும்¸ அதேபோல் பொது இடங்களில் மது குடிப்பதை தடுப்பது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது பற்றியும் அரசு முடிவெடுக்க வேண்டும் என வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது.
வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் அரசு, பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் படும் கஷ்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரது குரலாக உள்ளது.