திருவண்ணாமலை அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனது நிலத்திற்கு ரோட்டை ஆக்கிரமித்து பைப்-லைன் அமைக்க முயன்றதை கேள்விப்பட்ட கிராம மக்கள் ஜே.சி.பி இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை திருக்கோயிலூர் ரோட்டில் வன்னியநகரத்திலிருந்து பெருமணம் செல்லும் ரோட்டில் உள்ளது பனையூர் கிராமம். இந்த கிராமத்திற்கு செல்லும் மெயின் ரோட்டில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தி என்பவரது நிலம் உள்ளது. மூர்த்தி தற்போது ஆருத்திராப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். இவரது நிலத்தையொட்டி பெரியஏரியிலிருந்து உபரி நீர் வானந்தாங்கல் ஏரிக்கு செல்லும் வகையில் கால்வாய் அமைந்திருந்தது.
நிலத்தை சமப்படுத்திய போது ரோட்டையும் சேர்த்து மூர்த்தி ஆக்கிரமித்துக் கொண்டாராம். மேலும் ஏரிக்கு தண்ணீர்; செல்லும் கால்வாயை முழுவதும் மூடி விட்டு அதில் பைப்-லைன் அமைக்கும் பணியை மேற்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ரோட்டை ஆக்கிரமித்துக் கொண்டதால் 20 அடி ரோடு 10 அடியாக குறுகி விட்டதாகவும்¸ குறுகிய ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும்¸ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் மூர்த்தியின் நிலத்தில் கால்வாய் அமைக்கும் பணியை செய்து கொண்டிருந்த ஜே.சி.பி இயந்திரத்தை சிறைபிடித்தனர். இதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த மூர்த்தியிடமும்¸ கிராம நிர்வாக அலுவலர் ஜிவிதாவிடமும் கிராம மக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை தாசில்தார் வெங்கடேசன் மற்றும் வெறையூர்; போலீசார் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். நிலத்தை அளவீடு செய்த பிறகு பிறகுதான் எந்த பணியானாலும் செய்ய வேண்டும் என மூர்த்தியிடம் தெரிவித்தனர். இதற்கு அவர் உடன்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.