பா.ஜ.க – விடுதலை சிறுத்தையினர் ஒரே நேரத்தில்
கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டதால் பதட்டம்
நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார் எஸ்.பி அரவிந்த்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திரண்ட பாரதிய ஜனதா மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினரிடத்தில் எஸ்.பி அரவிந்த் நடத்திய பேச்சு வார்த்தையினால் மோதல் போக்கு தவிர்க்கப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி திருமணத்திற்கு சென்ற திருமாவளவனுக்கு பாஜகவினர் கருப்பு கொடி காட்டி அவரை தடுத்து நிறுத்தியதை கண்டித்தும்¸ மனுதர்ம நூலை தடை செய்ய கோரியும் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூடினர். அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற போது போலீசார் அவர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என கூறி தடுத்து நிறுத்தினர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கையும் விடுத்தனர். இதனால் கலைந்து சென்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் மாலை 3 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. அரவிந்த்தை சந்தித்து விடுதலை மனு அளித்தனர்.
இதற்கிடையில் மாலை 4 மணி அளவில் பெண்களை கேவலப்படுத்தும் திருமாவளவனை கைது செய்யக்கோரி ஆர்;ப்பாட்டம் நடத்துவதற்காக கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜகவினர் திரண்டனர். இதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் பா.ஜ.க ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இருகட்சியினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கயிறு கட்டி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மோதலை தவிர்க்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரில் வந்து பா.ஜ.க மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினரிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனாலும் பதட்டம் நீடித்தது. இதைத் தொடர்ந்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக மாவட்ட தலைவர் அ.ஜீவானந்தம்¸ மாவட்ட மகளிரணி தலைவி சுகந்தி உள்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதன் மாவட்ட செயலாளர் பி.கா.அம்பேத்வளவன் தலைமையில் கைது செய்யப்பட்டனர்.
பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.