Homeஆன்மீகம்திருவண்ணாமலை:நவராத்திரி விழா-பக்தர்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலை:நவராத்திரி விழா-பக்தர்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலை கோயிலில் நவராத்திரி விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்  இன்று சனிக்கிழமை தொடங்கிய நவராத்திரி விழாவில் பராசக்தி அம்மன் அலங்காரத்தில்  உண்ணாமலையம்மன் காட்சியளித்தார். 

சிவனை வழிபடுவது சிவராத்திரி என்பதாலும்¸ அம்பாளை வழிபடுவது நவராத்திரி என்பதாலும் 2விழாக்களும் பக்தர்களால் விமர்சையாக கொண்டாடப்படுகின்றன. மலைமகள்¸ அலைமகள்¸ கலைமகள் என்ற முப்பெரும் தேவியர்கள் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்ததே நவராத்திரி ஆகும். ஒன்பது நாட்கள் மகிசாசூரனுடன் கடுமையாக தேவியர்கள் போரிட்டார்கள். அவனை வென்ற 10வது நாளே வெற்றி தருகிற விஜயதசமி ஆகும். 

திருவண்ணாமலை கோயிலில் நவராத்திரி விழா

இந்த நவராத்திரியை வீட்டில் பெண்கள் பலவித பொம்மைகளை கொலுவாக வைத்து தினமும் பூஜை செய்து கொண்டாடுவார்கள். திருமணமாகாத பெண்கள் நவராத்திரி நாட்களில் வெள்ளிக்கிழமை அன்று சுமங்கலிகளுக்கு  துணி¸ தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாகும். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று மாலை நவராத்திரி விழா தொடங்கியது. முதல் நாள் பராசக்தி அம்மன் அலங்காரத்தில் உண்ணாமலையம்மன் காட்சியளித்தார். வேதமந்திரங்கள் முழங்க அலங்காரதீபத்தை பெரிய பட்டம் ராஜன்சிவாச்சாரியார் அம்மனுக்கு காட்டினார். உடன் இருந்த கோயில் இணை ஆணையர் ஞானசேகரன்¸ உள்துறை கண்காணிப்பாளர் வேதமூர்த்தி¸ கோயில் மிராசு ரகுராமன் விஜயகுமார்¸ மணியக்காரர் செந்தில் உள்ளிட்ட பணியாளர்கள் வழிபட்டனர். 

திருவண்ணாமலை கோயிலில் நவராத்திரி விழா

பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு காரணமாக சில கட்டுப்பாடுகளுடன் அண்ணாமலையார்-உண்ணாமலையம்மனை வழிபட அனுமதிக்கப்பட்ட  பக்தர்கள் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதனால் பல பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

நாளை ஸ்ரீராஜராஜேஸ்வரி¸ நாளை மறுநாள் ஸ்ரீகெஜலட்சுமி¸ 20ந் தேதி ஸ்ரீமனோன்மணி¸ 21ந்  தேதி ஸ்ரீரிஷப வாகனம்¸ 22ந் தேதி ஸ்ரீஆண்டாள்¸ 23ந் தேதி ஸ்ரீசரஸ்வதி¸ 24ந் தேதி லிங்கபூஜை¸ 25ந் தேதி மகிசாசூரமர்த்தினி  ஆகிய ரூபங்களில் ஸ்ரீஉண்ணாமலையம்மன் காட்சி தருகிறார். 26ந் தேதி விஜயதசமியன்று அம்மனுக்கும்¸ பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று விழா நிறைவடைகிறது. 

திருவண்ணாமலை விசிறி சாமியார் எனப்படும் யோகி சூரத் குமார் ஆசிரமத்தில் வருடாவருடம் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது 1000த்துக்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைத்து பூஜைகள் நடக்கும். 9நாட்கள் 3 வேலையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனாவால் இங்கு நவராத்திரி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாலும்¸ விசிறி சாமியார் ஆசிரமத்தில் நவராத்திரி விழா ரத்து செய்யப்பட்டதாலும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!