திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பஞ்சமுக தரிசன இடத்தில் இன்று போராட்டம் நடத்த பா.ஜ.கவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அவர்களது கோரிக்கையை ஏற்றதால் பதட்டம் தணிந்தது.
எண்ணற்ற அற்புதங்கள் நிறைந்த திருவண்ணாமலையில் மலையே இறைவனாக காட்சி தந்து வருகிறார். பொதுவாக நந்தி லிங்கத்தை நோக்கித்தான் இருக்கும். கிரிவலப்பாதையில் எட்டு நந்திகள் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளதால் மலையே லிங்கம் என்பதாகிறது.
இந்த மலை எட்டு திசைகளில் இருந்து பார்க்கும்போதும் எட்டுவித அமைப்பில் தெரியும். மலையின் கீழ்த்திசையில் இருந்து பார்க்கும்போது ஒன்றாகத் தெரியும். இது இறைவன் ‘ஏகன்’ என்பதை நமக்கு உணர்த்தும். சுற்றுப்பாதையில் இருந்து பார்க்கும் போது இரண்டாகத் தெரியும். இறைவன் ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்பது இதன் பொருள். மலையின் பின்னே இருந்து பார்க்கிறவர்களுக்கு அதன் அமைப்பு மூன்றாகத் தெரியும். இது திரிமூர்த்திகளை குறிக்கும்.
பிறகு ஐந்தாகத் தோன்றி பஞ்சமுகமாக காட்சியளிக்கும். இது ஈசானம்¸ தத்புருஷம்¸ அகோரம்¸ வாமதேவம்¸ சத்யோஜதம் என்னும் ஈசனின் ஐந்து முகங்களை நினைவூட்டும். இதன் அடிவாரத்தில் 5லிங்கங்கள் வைக்கப்பட்டு அதற்கு பூஜைகள் நடைபெறும். பஞ்சமுகதரிசனம் செய்யும் போது சிறந்த மனைவி அமைய வேண்டி ஐந்து முறை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எலுமிச்சை பழத்தை அன்னதானம் தருவதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்படி பக்தர்களால் தினமும் வணங்கப்படும் பஞ்சமுக தரிசனம் ஆலயத்தில் அமைந்துள்ள 5 சிவலிங்கங்களுக்கு சரியான முறையில் பூஜை¸ புனஸ்காரங்கள் நடப்பதில்லை. மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒளி விளக்குகள்பராமரிக்கப்படாமல் இருப்பதால் அங்கு இரவு நேரங்களில் தவறான செயல்கள் நடக்கிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விஷ ஜந்துக்களான தேள்¸ பாம்பு போன்றவைகளால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த குறைகளை களைய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுவும் அனுப்பப்பட்டது. மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் திருவண்ணாமலையில் சமீபத்தில் பா.ஜ.க ஓபிசி அணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பழனி கலந்து கொண்ட ஓபிசி அணி செயற்குழு கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.
இதையடுத்து இன்று காலை பஞ்சமுக தரிசன இடத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் பா.ஜ.கவினர் திரண்டனர். ஆயுதபூஜை தினமான இன்று முதல் ஐந்து லிங்கங்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை பூஜைகளை தொடங்க வேண்டும். இல்லையென்றால் கோயிலின் பூட்டை உடைத்து பா.ஜ.க சார்பில் பூஜைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை¸ குபேர லிங்கத்தில் உள்ள குருக்களை பூஜை செய்ய அனுப்பி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சந்தனம்¸ அபிஷேக பொடி¸ பால்¸ விபூதி ஆகியவற்றால் 5லிங்கங்களுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு தீப ஆராதனை காட்டப்பட்டது.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. கருணாகரன்¸ ஓ.பி.சி அணி மாவட்ட பொது செயலாளர் யுவராஜ்¸ மாவட்ட செயலாளர் மணிவண்ணன்¸ மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோசாலை சதீஷ்¸ நகர தலைவர் செந்தில்¸ துணை தலைவர் ராஜேஷ்¸ நகர செயற்குழு உறுப்பினர் செண்பகம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக பஞ்சமுக தரிசன இடத்தை பா.ஜ.கவினர் கூட்டி¸ பெருக்கி சுத்தம் செய்தனர்.
போதுமான வருமானம் இல்லாத காரணத்தால் கடந்த ஓராண்டாக பஞ்சமுக தரிசனம் ஆலயத்தில் அமைந்துள்ள 5 சிவலிங்கங்களுக்கு முறையான பராமரிப்பு மற்றும் பூஜைகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை தவறிவிட்டது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்திருக்கின்றனர். பா.ஜ.க எடுத்த நடவடிக்கையினால் இனிமேல் தொடர்ந்து பூஜைகளை நடத்துவதாக இந்து சமய அறநிலையத்துறை சொல்லியிருக்கிறது. தவறினால் இந்த பூஜைகளை பா.ஜ.க நடத்தும் என ஓ.பி.சி அணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளை பா.ஜ.க ஓ.பி.சி அணி மாவட்ட பொது செயலாளர் யுவராஜ் செய்திருந்தார். பா.ஜ.கவினரின் இந்த அதிரடி நடவடிக்கையை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.