100 கிலோ கஞ்சா¸ லாரி¸ இருசக்கர வாகனம் பறிமுதல்
3பெண்கள் உள்பட 7 பேர் கைது
ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலைக்கு கஞ்சா கடத்திய வந்த 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 100 கிலோ கஞ்சா¸ ஒரு லாரி¸ இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலைக்கு கஞ்சா கடத்தி வருவதாக திருவண்ணாமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த கும்பலை கையுங்களவுமாக பிடிக்க திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த்¸ தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு டி.அசோக் குமார் மேற்பார்வையில்¸ மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.சசிகுமார் மற்றும் கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் டி.விநாயகமூர்த்தி ஆகியோர் தலைமையில்¸ சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.சுமன்¸ மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியநாதன்¸ நடராஜன் மற்றும் போலீசார் அடங்கிய குற்றத் தடுப்பு தனிப்படை ஒன்றை அமைத்தார்.
இவர்கள் கண்ணமங்கலம் சோதனைச் சாவடியில் தீவிர வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் அந்த லாரியில் 40 பாக்கெட்டுகளில் மொத்தம் 100 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லாரியில் இருந்த திருவண்ணாமலை அண்ணா நகர் 9வது தெருவைச் சேர்ந்த உலகநாதன்(வயது 48), திருவண்ணாமலை அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்த ஜாகிர் உசேன்(48)¸ திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் லூர்து அந்தோணி (39) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கிடைத்த தகவலையடுத்து இவர்களிடம் கஞ்சாவை வாங்கி புழக்கத்தில் விட்ட திருவண்ணாமலை பூவந்தகுளத்தைச் சேர்ந்த சீனிவாசனின் மனைவி ஆஷா(32)¸ திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 3வது தெருவைச் சேர்ந்த தமிழரசன்(26)¸ திருவண்ணாமலை சமுத்திரம் காலனி வண்டி மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுகுமாரின் மனைவி சுலோச்சனா(45)¸ சமுத்திரம் காலனியைச் சேர்ந்த அன்பழகனின் மனைவி சகுந்தலா(21)¸ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர்களிடமிருந்து 100 கிலோ கஞ்சா¸ ஒரு லாரி¸ இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆந்திராவில் குண்டூர்¸ ராயலசீமா போன்ற சில மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் கஞ்சாவை கடத்தல்காரர்கள் கிலோ ரூ.2ஆயிரத்திலிருந்து ரூ.4ஆயிரம் வரை விலைக்கு வாங்கி பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்து அந்த பையை சுற்றி அகர்பத்தி கட்டுகள் அல்லது பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை கட்டி போலீசை ஏமாற்றி எடுத்துச் சென்று விடுவார்கள். இதே போல்தான் திருவண்ணாமலைக்கு பிளாஸ்டிக் பைகளில் கஞ்சாவை அடைத்து அதை அழகாக பேக் செய்து கடத்தி வந்துள்ளனர். இவர்களிடமிருந்து திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகள்¸ கஞ்சாவை பெற்று அதை சிறிய¸ சிறிய பொட்டலமாக கட்டி இளைஞர்கள்¸ மாணவர்களை குறி வைத்து விற்று லாபம் பார்த்துள்ளது தெரியவந்துள்ளது.