திருவண்ணாமலையில் திமுகவிற்கு அடுத்த படியாக 500 பேர் உட்கார கூடிய அளவில் புதியதாக மாவட்ட மதிமுக அலுவலகத்தை நகரின் மத்தியில் சீனி.கார்த்திகேயன் அமைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை அதிமுக¸ திமுகவில் உள்ளது போல் தெற்கு¸ வடக்கு என மதிமுக பிரித்துள்ளது. தெற்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் எம்.பி முருகையனின் பேரனும்¸ திருவண்ணாமலை எஸ்.முருகையன் நினைவு முன் மாதிரி மேல்நிலைப்பள்ளியின் தாளாருமான சீனி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எப்போதுமே தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை கனகச்சிதமாக முடிக்கும் திறன் படைத்தவரான சீனி.கார்த்திகேயன் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளர். அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை நகரின் மத்திய பகுதியான பெரியத் தெருவில் 500பேர் உட்கார கூடிய அளவில் மாவட்ட மதிமுக அலுவலகத்தை அமைத்துள்ளார். தற்போது திமுகவில் மட்டுமே மீட்டிங் ஹாலோடு கூடிய அலுவலகம் உள்ளது. அதிமுகவில் மாவட்ட அலுவலகம் இன்னும் அமைக்கப்படவில்லை.
புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி அலுவலகத்தை திறந்து வைத்தார். பிறகு நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய செஞ்சி ஏ.கே.மணி அரசியலில் நேர்மை¸ பொது வாழ்வில் தூய்மை¸ லட்சியத்தில் உறுதி என்ற லட்சியத்தோடு வை.கோ உள்ளார். லட்சியங்கள் அரசியலில் பயனளிக்காது. இதனால்தான் வை.கோ சொத்துக்ளை விற்று கட்சியை நடத்தி வருகிறார். திராவிடத்தை கட்டிக் காப்பாற்றுவது திமுகவும்¸ மதிமுகவும் மட்டும்தான். அதிமுக திராவிடம் இருப்பது போல் காட்டிக் கொள்கிறது. அதிமுக அமைச்சர்கள் பா.ஜ.கவிடம் பயந்து போய் உள்ளனர். இதனால்தான் பா.ஜ.கவின் மக்கள் விரோத திட்டங்களை அனுமதித்துள்ளனர் என்றார். மேலும் சீனி.கார்த்திகேயனின் நியமனம் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என தெரிவித்து மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டதற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய சீனி கார்த்திகேயன் நமக்கு முகவரி தந்தவர் தலைவர் வை.கோ. அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில் எனது நடவடிக்கைகள் இருக்கும் என்றார். கூட்டத்தில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.எ.அண்ணாமலை¸ ஆட்சி மன்ற குழு ஆலோசனைக்குழு உறுப்பினர் உதயசங்கர்¸ மாநில மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பாசறை பாபு உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்¸ 2005 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு கிடப்பில் கிடக்கும் திண்டிவனம் திருவண்ணாமலை புதிய இரயில் பாதை திட்டத்துக்கு மத்திய அரசு உரியநிதியை ஒதுக்க வேண்டும்¸ எட்டுவழி பசுமை சாலை திட்டத்தை கைவிட வேண்டும்¸ திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இதயநோய் மருத்துவர் மற்றும் சிறுநீரக சிறப்பு மருத்துவர்களை நியமிக்கவும்¸ அங்குள்ள கழிவறைகளை நவீனகருவிகள் மூலம் சுத்தம் செய்யவும் தமிழக அரசு முன்வரவேண்டும்¸திருவண்ணாமலை மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கி¸ விழுப்புரம் மாவட்டம் பழனிமலை ஏரி வரை தண்ணீர் வழங்கும் நந்தன் கால்வாய் திட்டத்தை ரூ. 40 கோடி நிதி ஒதுக்கி செயல்படுத்துவோம் என விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் நலன் பேணும்¸ நீர் வளத்தை மேம்படுத்தும் பயன்மிகு இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. எனவே வாக்குறுதியை நிறைவேற்றிட முதல்வர் முன்வர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அலுவலகம் திறப்பு¸ செயல்வீரர்கள் கூட்டத்தையடுத்து ஒன்றிய¸ நகர¸ பேரூராட்சி பகுதிகளில வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம்¸ மாவட்டம் முழுவதும் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடியேற்றுதல்¸ அனைத்து ஒன்றியங்களுக்கும்¸ அணிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் என மதிமுக பிசியாகி விட்டது. மதிமுவின் திடீர்எழுச்சியால் திருவண்ணாமலை அரசியல் களம் விறுவிறுப்பை அடைந்துள்ளது.