திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்களின் கண்கவர் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது.
திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கி வருகிறது. இங்கு 1100 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள்¸ பாண்டியர்கள்¸ சம்புவராயர்கள்¸ போசளர்கள்¸ விஜயநகர அரசர்கள்¸ நாயக்க மன்னர்கள்¸ நகரத்தார்கள்¸ குறுநில மன்னர்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட அண்ணாமலையார் கோயில் கட்டடக்கலை வரலாற்றில் சிறப்பு பெற்றுள்ளது.
இறைஉருவங்கள்¸ செப்புத்திருமேனிகள்¸ ஓவியங்கள்¸ அழகிய திருச்சுற்றுகள்¸ தீர்த்தக்குளங்கள்¸ ஆயிரக்கால் மண்டபம்¸ வானுயர்ந்த கோபுரங்களுடன் அழகுக்கு அழகு சேர்க்கும் இக்கோயில் 25 ஏக்கர் பரப்பளவில் 6 பிரகாரங்கள் தமிழ்நாட்டின் 2வது உயர கோபுரமாக விளங்கும் 217 அடி உயர ராஜகோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்கள் 142 சன்னதிகள்¸ 22 பிள்ளையார்கள்¸ 306 மண்டபங்கள்¸ 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம்¸ பாதள லிங்கம்¸ 43 செப்புச் சிலைகள்¸ கல்யாண மண்டபம் என பின்புறம் 2668 அடி உயர மலையின் அடிவாரத்தில் பிரமாண்டமாய் அமைந்துள்ளது.
மலையை ஒவ்வொரு இடத்திலும் நின்று பார்த்தால் ஏதாவது ஒரு வகை உருவம் தெரியும். இப்படி 27வகை தரிசனத்தை பார்க்கலாம். ஐந்து கூம்புகளுடன் கூடிய இறைவனின் பஞ்சமுக தோற்றம் சிறப்பு பெற்றது. இந்த மலையை விதவிதமான கோணங்களில் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த படங்கள் காலண்டரிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதே போல் அண்ணாமலையார் கோயில் வண்ண விளக்குகளில் ஜொலிக்கிற படங்களும்¸ ராஜகோபுர உச்சியில் பவுர்ணமி நிலா வந்த போது எடுக்கப்பட்ட படங்களும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.
கட்டிடக்கலையில் அதிகமான உயரத்தைப் பிடித்திருப்பது கோபுரம் கட்டும் கலையாகும். கட்டிடங்களும் மணிக்கூட்டுக்கோபுரம்¸ விமானம்¸ ராஜகோபுரம் என்பன உயரமானவையாகக் காணப்படும். கோயிலின் நடுவில் காணப்படும் கொடிமரமும் உயரமாக இருக்கும். அடியில் அகலமாக இருந்து படிப்படியாக ஒடுங்கிக் கொண்டு போவது கோபுர அமைப்பில் காணப்படும் பொதுவான அம்சமாகும். இரு கரங்களையும் தலைக்கு மேலாக வைத்து குவித்து வணங்கும் போது திருக்கோபுர அமைப்புக்கு ஒத்ததாக அவ்வமைப்பு இருப்பதைப் காணலாம். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” “கோபுர தரிசனம் பாப விமோசனம்” போன்ற ஆன்றோர் வாக்குகள் கோபுர தரிசனத்தால் ஆன்மா பெறும் புனிதத் தன்மையைப் புலப்படுத்துகிறது.
இந்நிலையில் விதவிதமாக கோணங்களில் எடுக்கப்பட்ட திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்களின் 48 படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது.
ப.பரசுராமன்