திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறும் நாளான திங்கட்கிழமை அன்று கூட்டம் நிறைந்து காணப்படுவது வழக்கம். கொரோனா ஊரடங்கினை முன்னிட்டு தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் என அறிவித்த போதிலும் ஏராளமானோர் நேரில் வந்து மனு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்¸ விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் என கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காட்சி அளித்தது. இதனால் ஒவ்வொரு நுழைவு வாயிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைவு படிஏறிய பின் உள்ள திட்டில் மனு வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கலெக்டர் கந்தசாமி பின்வாசல் வழியாக நுழைய அனுமதிக்கப்பட்ட பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
அப்போது கலெக்டர் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கலசபாக்கம் அடுத்த எம்.என்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி குப்பம்மாள் மற்றும் மகன் மாரிமுத்து ஆகிய 3 பேரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
40 வருடமாக அனுபவித்து வரும் தங்களுக்கு சொந்தமான 17 சென்ட் இடத்தை உறவினர் ஐயாயிரம் என்பவர் பங்கு கேட்டு பிரச்சனை செய்து வருவதையும்¸ அவரது பெயரை திருவண்ணாமலை தாசில்தார் கூட்டுப்பட்டாவில் சேர்த்ததையும் கண்டித்தும் தீக்குளிக்க முயன்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி விஜயா மற்றும் மகள் அருணா ஆகியோர் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றனர். அப்போது தீ தடுப்பு உபகரணங்களுடன் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதப்படை போலீசார் ஓடோடி வந்து மேற்கண்ட தீக்குளிப்பு முயற்சிகளை தடுத்து நிறுத்தினர்.
லாரி மோதிய விபத்தில் அருணாவின் கால் துண்டிக்கப்பட்டது¸ இதற்கு உரிய நிவாரணம் வாங்கிதர கோரி இந்த தீக்குளிப்பு சம்பவம் நடைபெற்றது. விபத்தை ஏற்படுத்திய லாரி உரிமையாளரிடம் உரிய நிவாரணத் தொகை பெற்றுத் தருவதாக ஆதமங்கலம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் கூறியதன் பேரில் வழக்கு எதுவும் தொடராமல் விட்டு விட்டோம். ஆனால் நிவாரணம் வழங்கவில்லை என அருணாவின் தாயார் விஜயா செய்தியாளர்களிடம் கூறினார். கலெக்டர் கண் எதிரே நடைபெற்ற இச்சம்பவங்களால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதுபற்றி ஆதமங்கலம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் கூறுகையில் நிவாரணத் தொகையாக விஜயாவிடம் அப்போதே ரூ.60ஆயிரம் வழங்கப்பட்டு விட்டது. அவர் இந்த தொகையை பெற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார் என்றார்.