Homeசெய்திகள்வியாபாரிகளுடன் திரண்ட பிச்சாண்டி எம்.எல்.ஏ ---ஆணுறை¸ செத்த எலியுடன் வந்த விவசாயிகள்

வியாபாரிகளுடன் திரண்ட பிச்சாண்டி எம்.எல்.ஏ —ஆணுறை¸ செத்த எலியுடன் வந்த விவசாயிகள்

வயிறார சாப்பிட்டு கலெக்டரை வாயார வாழ்த்திய மக்கள் 

தி.மலை குறை தீர்வு நாள் கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள்


பிச்சாண்டி எம்.எல்.ஏ

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு கொடுக்க காலை 9 மணி முதல் கொண்டே மக்கள் வர ஆரம்பித்தனர். மாவட்டத்தின் கடைகோடியிலிருந்தும் மக்கள் வந்தனர். இவர்கள் கலெக்டர் அலுவலக பின்வாசல் வழியாக மனு அளிக்க நீண்ட கியூவில் நிற்க வைக்கப்பட்டனர். 11-30 மணிக்கு கலெக்டர் கந்தசாமி வந்து மனுக்களை வாங்க ஆரம்பித்தார். 

சுதந்திர போராட்ட தியாகிக்கு நேர்ந்த அவலம் 

போளுர் வட்டம் வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த 80 வயது தியாகி மணி என்பவர் கலெக்டரிம் அளித்த மனுவில் வெண்மணி கிராமத்தில் தனது தாத்தா மற்றும் தந்தையின் கூட்டு பட்டாவாக உள்ள வீடு மற்றும் காலி மனை ஆகியவற்றிற்கு தான் ஒருவன் மட்டுமே வாரிசு என்றும்¸ இந்த சொத்துக்களை அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் தன்னை ஊரை விட்டு அடித்து துரத்தி விட்டு ஆக்கிரமித்துள்ளதாகவும்¸ அவரால் தன் உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவித்துள்ளார். 

20 வருடமாகியும் பயனில்லாத பட்டா

பயனில்லாத பட்டா

திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூரில் வசிக்கும் நாவிதர்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் கொடுத்துள்ள மனுவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 2000ம் தங்களுக்கு வழங்கப்பட்ட 4ஏக்கர் நிலம் அரசு கணக்கில் ஏற்றப்படாததால் அடிப்படை வசதிகள் இன்றி வீடு கட்ட முடியால் பயனின்றி இருப்பதாகவும்¸ அந்த இடத்தை அரசு கணக்கில் ஏற்றி அரசின் இலவச வீடு கட்டுவதற்கு ஆணை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

முகத்தை சுளித்த பொதுமக்கள்

ஆணுறை¸ செத்த எலியுடன்  விவசாயிகள்

என்.எம்.ஆர் உழவர் பேரவையினர் 2018ல் மணிலா உற்பத்தியில் தேசிய அளவில் விருது பெற்ற நிலையில் மழை தவறியதாலும்¸ எலிகள் பெருக்கத்தினாலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும்¸ எனவே இழப்பீடுகளை கணக்கெடுத்து காப்பீடு வழங்கிட வேண்டும் எனவும்¸ எலிகளின் இனப்பெருக்கத்தை தடுத்திட வேண்டும் எனவும் கேட்டு செத்த எலியோடும்¸ ஆணுறை(நிரோத்)யோடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆணுறையை பார்த்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் முகம் சுளித்து சென்றனர். 

பிச்சாண்டியை அழைத்து வந்த வியாபாரிகள்

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த திருவண்ணாமலையில் உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட் ஆகியவை மீண்டும் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் பூ மார்க்கெட் மட்டும் திறக்கப்படாமல் உள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பூ மார்க்கெட் திறக்கப்படாததால் 100க்கும் கடைதாரர்களும்¸ தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் மார்க்கெட்டை திறக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க பிச்சாண்டி எம்.எல்.ஏவுடன்  வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு கலெக்டர் கந்தசாமியை சந்தித்த பிச்சாண்டி எம்.எல்.ஏ பூ வியாபாரிகளின் கோரிக்கையை எடுத்துரைத்தார். உடனே கலெக்டர் கந்தசாமி¸ நகராட்சி ஆணையாளரை போனில் தொடர்பு கொண்டு நாளை முதல் பூ மார்க்கெட்டான ஜோதி மார்க்கெட்டை திறக்கும்படி உத்தரவிட்டார். கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் கலெக்டருக்கும்¸ பிச்சாண்டி எம்.எல்.ஏவுக்கும் வியாபாரிகள் நன்றியை தெரிவித்து கலைந்து சென்றனர். 

இறைவனின் சமையலறை 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்று திறனாளிகள்¸ முதியோர்கள்¸ குழந்தைகளுக்கு திங்கட்கிழமை தோறும் இலவச உணவு அளிக்கும் இறைவனின் சமையலறையை கலெக்டர் கந்தசாமி ஏற்படுத்தியுள்ளார். இங்கு திங்கட்கிழமை மனு அளிக்க வருபவர்களில் 500 பேருக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 3வது வாரமாக உருளை கிழங்கு பொறியலுடன் எலுமிச்சை சாதம்¸ புளி சாதம் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் வயிறார சாப்பிட்டு கலெக்டரை வாழ்த்தி விட்டு சென்றனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!