Homeசெய்திகள்வளர்ச்சி பணிக்கு தடை-பெண் ஊராட்சி தலைவர் அதிரடி முடிவு

வளர்ச்சி பணிக்கு தடை-பெண் ஊராட்சி தலைவர் அதிரடி முடிவு

1கோடியே 50லட்சம் ரூபாய் இருந்தும் வளர்ச்சி பணிகளை செய்ய விடாமல் கலெக்டர் முதல் அதிகாரிகள் வரை முட்டுகட்டை போட்டு வருவதால் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அறிவித்துள்ளார். 

பெண் ஊராட்சி தலைவர்

திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு அருகே உள்ளது பழையனூர் ஊராட்சி. 6 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட  பெரிய ஊராட்சியாக பழையனூர் விளங்கி வருகிறது.  இந்த ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் ஒன்றிய பேரவை செயலாளராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த துர்க்காதேவி என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

கடந்த 9 மாதத்திற்கு முன்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பழையனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு துர்க்காதேவி போட்டியிட்டார். இதில் 860 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றார். இந்த ஊராட்சியில் குவாரி நிதி ரூ.68லட்சம்¸ பொது நிதி ரூ.43லட்சம்¸ 14நிதிக்குழு பணம் ரூ.33 லட்சம் என வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள போதிய நிதி இருப்பு இருந்ததால் குடிநீர்¸ தெருவிளக்கு¸  கழிவுநீர் கால்வாய்¸ சாலைவசதி  உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள திட்டங்களை தயார் செய்து தீர்மானம் நிறைவேற்றி அதை ஒப்புதலுக்காக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு  துர்க்காதேவி அனுப்பி வைத்தார். 

இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த ஊரில் சமுதாய கூடமாக மாற்றப்பட்ட  பயன்பாட்டில் இல்லாத  பள்ளி கட்டிடத்தில் ரூ.15லட்சத்தில் கார் பார்க்கிங் அமைக்க உதவி இயக்குநர் அரவிந்த் முடிவு செய்து இதற்கு தீர்மானம் நிறைவேற்றி தரும்படி கேட்டாராம். குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்க வழியில்லை. அடிப்படை வசதிகளுக்காக போடப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் கார் பார்க்கிங்  எங்களுக்கு எதற்கு? என தீர்மானம் போட ஊராட்சி மன்றத் தலைவர் துர்க்காதேவி மறுத்து விட்டார். இதனால் அவருக்கும், உதவி இயக்குநர் அரவிந்த்துக்கும் ஏற்பட்ட மோதல் போக்கால் அந்த ஊராட்சியிலும்¸ கிராம சபையிலும் மீண்டும் மீண்டும் போடப்பட்ட தீர்மானங்களுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளிக்காமல் முட்டுக்கட்டை போட்டனர். இதனால் பதவியேற்று 9 மாதங்கள் ஆகியும் எந்தவித வளர்ச்சி பணிகளையும் நிறைவேற்ற முடியாமல் துர்க்காதேவி திணறி வந்தார்.  

 கிராம சபை கூட்டத்தில்  நடைபெறவேண்டிய பல்வேறு பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதனுடைய நகல் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் அளிக்கப்பட்டது. ஆனால் இதன் மீது மாவட்ட ஆட்சியர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் 100நாள் வேலை திட்டத்தில் பழைய பணி தள பொறுப்பாளர்களே பணியில் இருக்க வேண்டும்¸ அவர்களை மாற்றக் கூடாது என திட்ட இயக்குநர் தரப்பில் மிரட்டல் வந்ததாக சொல்லப்படுகிறது. இப்படி தொடர்ச்சியான பிரச்சனைகளால் விரக்தி அடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் துர்க்காதேவி பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கண்ணீர் மல்க அறிவித்துள்ளார். 

இதற்காக பழையனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இன்று கிராம மக்களை அழைத்து எந்தந்த திட்டங்களுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி போதிய அளவு இருந்தும் திட்டங்கள் ஏன் நிறைவேற்ற முடியாமல் உள்ளது என்பது குறித்து துர்க்காதேவியும்¸ அவரது கணவர் வெங்கடேசனும் விளக்கினர். அரசுஅதிகாரிகள் ஊராட்சியில் பணிகளை மேற்கொள்ளஅனுமதி மறுப்பதால் தலைவர் பதவியிலிருந்து விலகி கொள்ள போவதாக துர்க்காதேவி கூறியதை கேட்டு பரிதாபப்பட்ட கிராம மக்கள் இதற்கு காரணமான அதிகாரிகளை சபித்து தள்ளினர். 

பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஊராட்சி மன்றத் தலைவர் துர்க்காதேவி வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதற்கு கலெக்டர் முதல் அதிகாரிகள் வரை முட்டுகட்டை போட்டு வருவதால் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி சாவியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓப்படைக்க போவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!