Homeஅரசியல்வேளாண் சட்டம் - திமுகவின் கண்டன தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக

வேளாண் சட்டம் – திமுகவின் கண்டன தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை தமிழக முதல்வரும்¸ அதிமுகவும் வரவேற்றுள்ள நிலையில் திருவண்ணாமலையில் திமுக வசம் உள்ள மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . 

மத்திய அரசின்  புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சட்டம் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் தெரிவித்துள்ள நிலையில் இச்சட்டத்தை எதிர்த்து  திருச்சி சிவா எம்.பி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் திடீரென இக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. கிராம சபை கூட்டத்தில் வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தை தொடர்ந்தே கிராம சபை ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. 

திருவண்ணாமலையில் வருகிற 11ந் தேதி விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் சங்கமம் என்ற கூட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நடத்துகிறது. இப்படி வேளாண் சட்டத்திற்கான போராட்டங்கள் தொடர்கிற நிலையில் திருவண்ணாமலையில் திமுக கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

See also  அதிமுக - பாஜகவினரிடையே கடும் வாக்குவாதம்

34 உறுப்பினர்கள் கொண்ட திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சியில் திமுக 24 லிலும்¸ காங்கிரஸ் 1 இடத்திலும்¸ அதிமுக 9 இடங்களிலும் வெற்றியை பெற்றன. அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் திமுகவைச் சேர்ந்த பார்வதி சீனுவாசன் தலைவராகவும்¸ பாரதி ராமஜெயம் துணைத் தலைவராகவும் உள்ளனர். 

இந்நிலையில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பெரும்பாலான திமுக உறுப்பினர்களும் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த கோவிந்தராஜ்¸ அரவிந்த்(மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் மகன்)¸ சாந்தி¸ தவமணி உள்ளிட்டோரும் அதிகாரிகள் தரப்பில் மாவட்ட ஊராட்சி செயலாளர் சரண்யாதேவி¸ ஆணையாளர் பாண்டியன் ஆகியோரும் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் ரூ.5கோடியே 25லட்சத்தில் ஊராட்சிகளின் கட்டுபாட்டில் உள்ள சிறுபாசன ஏரிகளை சீரமைத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே அஜெண்டாவில் உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிறகு மத்திய அரசின் வேளாண் சட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளை வாழவைக்கும்¸ விவசாயிகளின் வாழ்வை பாதிக்கும் என்பதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் மாவட்ட திமுக செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ ஆலோசனையின் பேரில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தெரிவித்தார். 

See also  திருவண்ணாமலையில் ராதிகா சரத்குமார் சாமி தரிசனம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் எந்த வித கருத்தையும் பதிவு செய்யவில்லை. கண்டித்து வெளிநடப்பும் செய்யவில்லை. இதையடுத்து எந்தவித எதிர்ப்பும் இன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் திருவண்ணாமலையில் இச்சட்டத்திற்கு எதிர்ப்பாக திமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணிமயம் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

கூட்டம் முடிந்ததும் மாவட்ட ஊராட்சிக்கு சொந்த கட்டிடம் கேட்டு கலெக்டர் கந்தசாமியை  மாவட்ட கவுன்சிலர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அந்த அலுவலகம் செயல்பட்டு வந்த பழைய கட்டிடத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!