தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வருவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை கலெக்டர் கந்தசாமி ஏற்படுத்தியுள்ளார். திங்கட்கிழமை தோறும் நீண்ட தூரத்திலிருந்து வரும் பொதுமக்கள் மனு அளித்து விட்டு திரும்பி செல்லும் போது பசியோடு செல்லக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தை பலரும் வரவேற்று கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலங்களிலும் ஏன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற விவாதமும் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் மனு கொடுக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்ட அன்று 21ந் தேதி 449 பேர்கள் மனு அளித்தனர். 28ந் தேதி 620பேர் மனு அளித்தனர். இந்த எண்ணிக்கை சென்ற வாரம் 965ஆகவும்¸ இந்த வாரம் 874ஆகவும் உயர்ந்தது. இவர்களில் உடல் ஊனமுற்றவர்கள்¸ வயதானவர்கள்¸ குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஒவ்வொரு வாரமும் ஒரு பி.டி.ஓ மேற்பார்வையில் 500 பேர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் துவக்கிய 2வது நாளே திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டில் வசிக்கும் நடிகரும்¸ பேராசிரியருமான சையத் ஜஹிருத்தின் 12ம் வகுப்பு படிக்கும் மகன் சையத் ஜீஷான்¸ 8ம் வகுப்பு படிக்கும் மகள் ரோஜினா ஆகியோர் தாங்கள் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூ.3ஆயிரத்தையும்¸ அவரது தந்தை மருத்துவர் அகமதியா ரூ.2ஆயிரத்தையும் இறைவனின் சமையலறை திட்டத்திற்கு நன்கொடையாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினார்கள்.
இதையடுத்து 4வது வாரமான நேற்று திருப்பூரைச் சேர்ந்த ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளையின் சார்பில் 500 பேர்களுக்கு உருளைகிழங்கு பொறியலோடு புளியோதரை¸தக்காளி¸ வெஜிடபிள் சாதம் வழங்கப்பட்டது. இது குறித்து அந்த அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் மு.பூபதி செய்தியாளர்களிடம் கூறுகையில் திருப்பூரில் இயங்கி வரும் ஸ்ரீ மகா சக்தி அறக்கட்டளை ஏழை¸ எளியவர்களுக்கு உதவுவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு ரூ.85லட்சத்தில் நிவாரண பொருட்களை வழங்கியிருக்கிறோம். திருப்பூரில் இருந்து இங்கு வந்து மாவட்ட ஆட்சியரின் இந்த உன்னத திட்டத்தில் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்;. இதுபோல் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இலவச உணவு வழங்குவதற்கு கோரிக்கை வைத்து அதில் பங்கேற்க உள்ளோம். எங்களை போன்று மற்ற சமூக ஆர்வலர்களும் இத்திட்டத்தில் பங்கேற்க முன்வரவேண்டும் என்றார்.
இறைவனின் சமையலறை திட்டத்திற்கு பொருளுதவி அளிப்பவர்கள் முன் வந்து அளிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். ஆனால் தானத்தில் சிறந்த அன்னதான திட்டத்திற்கு உதவ திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து செல்வந்தர்கள் யாரும் இதுவரை முன்வரவில்லை .