திருவண்ணாமலையில் நாளை பரணி மற்றும் மகாதீப நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதையொட்டி மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கொரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு பக்தர்களின்றி நடத்து வருகிறது. முக்கிய நிகழ்வாக நாளை 29.11.2020 ஞாயிறு 10-ம் நாள் திருவிழாவில் விடியற்காலை 4 மணிக்கு கோயில் கருவறைக்குள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருளுகிறார். 6 மணிக்கு வருடத்துக்கு ஒரு முறை காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிக்க 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இதையொட்டி மேல் பாகம் மூன்றே முக்கால் அடி¸ கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவில் 150 கிலோ எடையில் கால் இன்ச் தடிமனுடன்¸ 20 வளைய ராடுகளுடன் கூடிய செப்பு தகட்டினால் செய்யப்பட்ட மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை செப்பனிடும் பணிகள் முடிவடைந்ததையொட்டி மலை உச்சிக்கு எடுத்துச் செல்வதற்காக இன்று கோயிலுக்குள் பூஜைகள் நடைபெற்றன.
பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த தீப 6 அடி உயரமுள்ள கொப்பரைக்கு கிளி கோபுரம் அருகில் உள்ள நந்தி சிலை முன்பு பூஜை செய்யப்பட்டன. பிறகு கொப்பரையின்இருபுறமும் கயிற்றால் கம்புகளை கட்டி தோளில் சுமந்து 2668 உயர மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர்.
தீபம் ஏற்றுவதற்காக 3500 கிலோ ஆவின் நெய்¸ 1000 மீட்டர் நீளம் கொண்ட காடா துணியால் ஆன திரி ஆகியவை பூஜை செய்து தயார் நிலையில் உள்ளது. இவை நாளை காலை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
திருவண்ணாமலை மலைமீது மகாதீபம் ஏற்றும் உரிமை பார்வதி தேவியார் அவதரித்த மரபைச் சேர்ந்த பருவதராஜகுலத்தினர் எனப்படும் செம்படவர்களுக்கு உரியது. திருவண்ணாமலை நகரில் இந்த இனத்தவர்கள் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 5 வம்சாவழிகளாக உள்ளவர்கள் மகா தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.