திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவையட்டி இன்று 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
கோயில் முன்புற பகுதியான தேரடித் தெரு தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது. |
வைர கிரீடம்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப 10வது நாள் விழாவான பரணி மற்றும் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையட்டி அதிகாலை 2 மணியளவில் அண்ணாமலையார் கோவில் நடைதிறக்கப்பட்டு உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு பால்¸ தேன்¸ பஞ்சாமிர்தம்¸ மஞ்சள்¸ இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைர கிரீடம் மற்றும் தங்க கவசம்¸ உண்ணாமலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.
வெறிச்சோடிய கிரிவலப்பாதை |
பர்வத ராஜகுலத்தினர்
பின்னர் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத¸ இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபமானது. ஓடல்¸ எக்காளம் முழங்க அம்மன் சன்னதி¸ விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் பரணி தீபம் கால பைரவர் சன்னதியில் காலை 11 மணிவரை வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பரணி தீபம் பர்வத ராஜகுலத்தினரால் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இறைவன் மலைக்கு சென்றுவிட்டதாக கருத்தில் கொண்டு கோவில் சன்னதிகள் அனைத்தும் சாத்தப்பட்டன.
கோயிலுக்குள் மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக சாமி சன்னதியில் இருந்து வெளியே வந்து கிளி கோபுரம் அருகிலுள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். சரியாக 5.55 மணி அளவில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே வெளியே வந்தார். அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்ததும் கோவில் தங்க கொடி மரம் முன்பு உள்ள அகண்ட தீபத்தில் மாலை 6 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ராட்சத கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா எனும் பக்தி கோஷம் எழுப்பப்பட்டது.
மலை உச்சியில் தீபம் ஏற்றியதும் நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் காத்திருந்த பக்தர்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றினர் ஆங்காங்கே வானவேடிக்கையும் நடந்தது. அண்ணாமலையார் கோயிலில் மாலை 5-30 மணிக்கு அம்மன் வெளியே வந்த போது திடீரென மழை பெய்தது. சிறிது நேரத்தில் மழை நின்றது. ஆனால் மலை மேக மூட்டமாக காட்சியளித்தது. இதனால் மகா தீபம் பல்வேறு பகுதிகளில் தெரியாததால் பக்தர்கள் வேதனையடைந்தனர். ஒரு சில பகுதிகளில் நீண்ட நேரத்திற்கு பிறகுதான் தீபம் தெரிந்தது.
மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மண்டபம் முன்பு எழுந்தருளியுள்ள சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவு பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடைபெற்றது. மகாதீப திருவிழா 10 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி நாளை 30ந் தேதி சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் 1ந் தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் 2ந் தேதி சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெறவுள்ளது. வழக்கமாக தெப்பல் உற்சவ நிகழ்ச்சியில் ஐயங்குளத்தில் நடைபெறும் இந்த ஆண்டு தெப்பல் உற்சவம் கோவில் வளாகத்திலுள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து சண்டிகேஸ்வரர் வெள்ளி வாகன உற்சவத்துடன் தீபத்திருவிழா நிறைவு பெறுகிறது.
மகாதீப விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன்¸ ஆட்சியர் சந்தீப் நந்தூரி¸ ஆவீன் பெருந்தலைவர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி¸ மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் ராஜன்¸ முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மகா தீபம் ஏற்றும் நேரத்தில் கோயிலுக்குள் சுமார் 1000 பேர் திரண்டிருந்தனர்.