போலி அட்ரசுக்கு குவியல்¸ குவியலாக வந்த
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
அதிகாரிகள் திகைப்பு
திருவண்ணாமலையில் தடைசெய்யப்பட்ட 2 ½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பார்சல் சர்வீஸ் நிறுவனம்
திருவண்ணாமலை- அவலூர்பேட்டை ரோடில் உள்ள தமிழ் மின்நகரில் ஏ1 டிராவல்ஸ் மற்றும் ஸ்பீடு பார்சல் சர்வீஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வந்திருப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை அந்த பார்சல் நிறுவனத்தில் நகராட்சி ஆணையாளர் நவேந்திரன்¸ சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் மற்றும் அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
மதிப்பு ரூ.2லட்சம்
அப்போது அங்கு மூட்டை¸ மூட்டையாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்¸ டீ கப்¸ தண்ணீர் கப்¸ பார்சல் பை உள்ளிட்ட பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 2 ½ டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி நகராட்சி லாரி மூலம் ஏற்றிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.2லட்சம் ஆகும். கைப்பற்றப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நகராட்சி மூலம் மறு சுழற்சி செய்யப்பட உள்ளது.
ரூ.25ஆயிரம் அபராதம்
இந்த பார்சல் சர்வீசுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் புக் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒட்டப்பட்டுள்ள விலாசங்கள் போலியாக இருப்பதை பார்த்து அதிகாரிகள் திகைத்தனர். விசாரித்ததில் வழக்கமாக ஏதாவது ஒரு விலாசத்தை ஒட்டி இப்படிப்பட்ட பார்சல்கள் வரும் என்பதும்¸ பார்சல் சர்வீசுக்கே ஆட்கள் வந்து இந்த பொருட்களை கொண்டு செல்வார்கள் என்பதும்¸ பார்சல்கள் எங்கே செல்கிறது என்பது அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு தெரியாது என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த பார்சல் சர்வீஸ் நிறுவனத்திற்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எங்கே செல்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி டெக்னிக்காக வேலை செய்யும் கும்பல் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.