திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்குள் நுழைய வெளியூர் பக்தர்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கோயில் வளாகத்தில் இன்று 27.11.2020 மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த்¸ மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர்¸ மாவட்ட வருவாய் அலுவலர் பொ. இரத்தினசாமி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா. ஜெயசுதா¸ உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) அமீத்குமார்¸ திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி¸ திருவண்ணாமலை கூட்டுறவு நகர்புற வங்கி தலைவர் டிஸ்கோ குணசேகரன்¸ மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது¸
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தில் 29.11.2020 அன்று 10-ம் நாள் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவான அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம்¸ மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலை நகரம் அய்யங்குளத்தில் பாரம்பரியாமாக நடைபெற்று வந்த தெப்பல் திருவிழா¸ திருக்கோயில் வளாத்தில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் ஆகம விதிகளின்படி 30.11.2020 முதல் 02.12.2020 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் தொலைக்காட்சி¸ அரசு கேபிள் டிவி¸ உள்ளுர் கேபிள் டிவி¸ யூ டியூப் மற்றும் திருக்கோயில் இணைய தளம் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மகா தீப நாளான 29ந் தேதி அன்று பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. மேலும்¸ அண்ணாமலையார் மலை மீது ஏறி மகா தீபம் தரிசனம் செய்யவும் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. 29.11.2020 பகல் 1.32 மணி முதல் 30.11.2020 பகல் 3.19 வரை கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 03.12.2020 வரை திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பாக தினந்தோறும் தரிசனம் வரும் பக்தர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 28.11.2020 முதல் 30.11.2020 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது. மேலும்¸ திருவண்ணாமலை நகரம்¸ செங்கம் சாலை கிரிவலப் பாதை¸ அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள சந்தை மேடு மைதானத்தில் வருடம் தோறும் நடைபெறும் மாடு மற்றும் குதிரை சந்தை நடத்த அனுமதி கிடையாது. திருவண்ணாமலை நகரம் மற்றும் சுற்றியுள்ள பொது மக்கள் 29.11.2020 அன்று நடைபெறும் மகா தீபத் திருவிழாவினை தங்கள் வீடுகளிலிருந்து அண்ணாமலையார் மலை உச்சியின் மீது ஏற்றப்படும் மகா தீபம் தரிசனம் செய்திடுமாறும்¸ பொது மக்கள் நகரின் எந்தவொரு பகுதியிலும் தேவையின்றி கூடாமலும்¸ கூட்ட நெரிசல் ஏற்படுத்தாமலும்¸ தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருவண்ணாமலை நகரத்திற்கு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு 28.11.2020¸ 29.11.2020 மற்றும் 30.11.2020 ஆகிய மூன்று நாட்களும் தடை விதிக்கப்படுகிறது. இந்த நாட்களில் காவல் துறை மூலமாக திருவண்ணாமலை நகரத்திற்கு வரும் அணுகு சாலைகளில் 15 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்படும். கார்த்திகை தீபத் திருவிழாவை பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலிருந்து பார்க்கும் வகையில் தொலைக்காட்சி¸ உள்ளுர் கேபிள் டிவி¸ சமூக ஊடகங்கள் மற்றும் திருக்கோயில் இணையதளம் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பஸ்கள் திருவண்ணாமலைக்கு வருவதற்கு தடை விதிக்கப்படவில்லை. அனைத்து நாட்களிலும் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 28ந் தேதி முதல் 30ந் தேதி வரை குறைந்த அளவே பஸ்களில் பயணிகள் ஏற்றப்பட உள்ளனர். திருவண்ணாமலைக்கு வரும் பஸ்கள் நகருக்கு வெளியே நிறுத்தப்பட உள்ளது.