தீர்த்தமலை அருகே அமைக்கப்பட்டுள்ள 3500 வருட கால ஓலைச்சுவடி குறிப்பில் இருந்து உருவாக்கப்பட்ட 85 ஆயிரம் டன் பருமன் உள்ள ஆகாய லிங்கத்தை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
தர்மபுரி அரூர் தாலுக்கா தீர்த்தமலை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொய்யப்பட்டி கிராமத்தில் தீர்த்தகிரிஸ்வரரை பார்த்தவாறு பொய்கை சித்தர்பீடம் உள்ளது. சித்தர் பீடத்தின் மேல் 148 கல் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு முன் ராஜதுர்க்கையும் கோவிலுக்கு உள்ளே ஒரே கருவறையில் பொய்கை சித்தர் ஜீவசமாதியும் அதற்கு மேல் வனதுர்க்கையும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
தீராத நோய் உள்ளவர்கள் பாதாளத்தில் உள்ள பொய்கை சித்தரையும்¸ மேல் உள்ள வனதுர்க்கையையும் வணங்கினால் நோய்தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகவே உள்ளது. பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் ஜீவசமாதியில் உள்ள சித்தரை வணங்கி ராஜதுர்க்கை மற்றும் வனதுர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து புது வஸ்திரம் சாத்துகின்றனர்.
குழந்தை பேறு தரும் தீர்த்தமலை மூலிகை
பொய்கை சித்தர் பீடத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தீர்த்தமலையில் இருந்து பறித்து வந்த மூலிகைகளை அரைத்து சித்தர் பீடத்தின் மேல் உள்ள வனதுர்க்கையின் பாதத்தில் வைத்து 24 நாட்கள் கொடுக்கப்படுகிறது. அப்படி வாங்கி உட்கொண்டவர்களுக்கு ஒரு சில மாதங்களில் கருத்தரிப்பது இத்தலத்தின் ஐதீகமாக உள்ளது. மேலும் பில்லி சீன்யம்¸ ஏவல் போன்ற செய்வினைகளால் பொய்கை சித்தர் பீடத்திற்கு வந்து பலன் பெற்று செல்வதாக செவிவழி செய்தியாக உள்ளது.
10 லட்சம் ருத்திராட்சங்களால் ஆன ஆகாய லிங்கம்
44 1/4 அடி உயரம் கொண்ட ஆகாயலிங்கம் 85 ஆயிரம் டன் பருமன் அளவு கொண்டதாகும். இதனை கட்ட 7 டன் வெல்லமும் தண்ணீருக்கு பதில் பாலையும் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதில் 10 லட்சம் ருத்திராட்சங்களை பஸ்பமாக்கி கலவை கலந்தும் 3 லட்சம் கடுக்காய்களையும் பஸ்பமாக்கி கலக்கப்பட்டுள்ளது. ஆகாய லிங்கத்தை சுற்றி வந்தால் தீராத தோஷம் நீங்கும் என்பதும் திருமணதடை உள்ள ஆண்-பெண் 12 முறை சுற்றி வந்தால் தோஷம் நிவர்த்தி பெறலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தோல் நோய் சம்பந்தப்பட்டவர்கள் மன உபாதை உடல் உபாதை¸ குடும்ப பிரச்சன¸ கல்வியில் சிறக்கவும் கடன் பிரச்சனைகள் தீரவும் ஆகாய லிங்கத்தை சுற்றி வந்ததும் தரப்படும் விபூதி பிரசாதத்தை உட்கொண்டால் நோய் உள்ளவர்களும் புத்துணர்ச்சியுடன் செல்லலாம் என்பது சித்தர் பீடத்தின் ஜதீகமாக உள்ளது.
இது குறித்து பொய்கை சித்தர் பீட நிர்வாகி கோகி மணி சுவாமிகள் கூறுகையில் மலை¸நதி¸வனம் சூழ்ந்த பகுதிதான் பொய்கை எனப்படும். இந்த பொய்கை சித்தர் பீடத்தை சுற்றி 4 திசைகளிலும் காடும்¸ ஆறும் உள்ளன. தீர்த்தகிரி மலையை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்த சித்தர் பீடத்தில் அமாவாசை தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
புனிதமடையும் பொய்யாப்பட்டி
இங்கிருக்கும் கல் விக்கிரகங்களுக்கு தீர்த்தமலையில் 12 தீர்த்தங்களிலிருந்து சேகரிக்கப்படும் தீர்த்தத்தை கொண்டு தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால் இந்த பீடம் மட்டுமன்றி பொய்யாப்பட்டி கிராமமே புனிதம் அடைகிறது. 2002ம் ஆண்டு பஞ்சபூத பூமி பூஜைக்காக இங்கு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பொய்கை சித்தர் என தெலுங்கில் எழுதப்பட்ட ஜீவசமாதி தென்பட்டது. அதை பலகையால் மூடி வழிபட்டு வருகிறோம். ஒவ்வொரு நவக்கிரக தலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட கற்களை கொண்டு விக்கிரகங்களை அமைத்துள்ளோம். பகல் 12 மணிக்கு அம்மாள் மீது பிரமீடு மூலம் சூரிய ஒளிக்கதிர்கள் படுகிறது. அதே போல் சுற்றிலும் உள்ள லிங்கங்கள் மீதும் இந்த ஒளிக்கதிர்கள் விழும்.
நோய் தீரும்¸ திருமணம் கைகூடும்
போகர் லட்சுமி தந்திரன் எழுதிய 3500 வருட கால ஓலைச்சுவடியில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்பில் இருந்து உருவாக்கப்பட்ட ஆகாய லிங்கத்தை 9 முறை வலம் வந்தால் தோல் நோய்களும்¸ 12 முறை வலம் வந்தால் ஆஸ்துமா¸ வயிறு பிரச்சனைகள் தீரும். 27 முறை வலம் வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். 48 முறை வலம் வந்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்¸ அனைத்து நோய்களும் தீரும் என்றார்.
கோகி மணி சுவாமிகள் மழை பெய்ய வேண்டியும்¸ உலக நன்மைக்காகவும் சென்ற வருடம் 10 அடி ஆழ குழிக்குள் அமர்ந்து தவபூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைவிடம் :
திருவண்ணாமலையில் இருந்து தண்டராம்பட்டு-தானிப்பாடி வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் தீர்த்தமலையில் நின்று செல்லும். தீர்த்தமலையில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் பொய்யப்பட்டியில் பொய்கை சித்தர்பீடம் உள்ளது.
தொடர்புக்கு :
கோகி மணி சுவாமிகள்
பொய்கை சித்தர் பீடம்
9751426064¸ 6369470263
செய்தி மற்றும் படங்கள்-ப.பரசுராமன்.