மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படியே தீபத்திருவிழா
அறநிலையத்துறை கமிஷனரிடம் கோயில் இணை ஆணையர் ஆலோசனை
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா எப்படி நடத்தப்படும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது பக்தர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் எத்தனையோ சைவ தலங்கள் இருந்தாலும் முதன்மையான தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயமாகும். இந்த தலம் பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக உள்ளது. நினைத்தாலே முக்தி தரும் சிறப்பு இந்த தலத்துக்கு மட்டுமே உண்டு.
விஷ்ணு¸ பிரம்மா¸ துர்க்கை ஆகியோர் தவம் இருந்த தலம். சிவபெருமான் பார்வதிக்கு தனது இடதுபாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராக தோன்றிய தலம். திருவெம்பாவை பாடப்பட்ட தலம். திருப்புகழின் முதல் பாடல் உருவான தலம். தமிழகத்தில் இரண்டாவது பெரிய ராஜகோபுரம் உள்ள தலம். அருணகிரி நாதர் அவதரித்த தலம். சமய குரவர்களால் பாடல்பெற்ற தலம். நான் என்ற அகந்தையை அழிக்கும் தலம். சித்தர்கள் நிறைந்த தலம். கிரிவலம் தோன்றிய தலம்.
இப்படி சிறப்பு பெற்ற தலத்தில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அதி சிறப்புடையதாகத் திகழ்கிறது. இக் கோயிலின் பிரதான பிரம்மோற்சவம் இதுவே ஆகும். இறைவன் ஜோதி வடிவமாக தோன்றி அருள் வழங்கி அடிமுடி காணாத அளவில் எங்கும் நிலைத்து இருக்கின்றார் என்பதை உணர்த்துவதே இத்திருவிழாவின் சிறப்பாகும்.
இந்த வருடம் தீபத்திருவிழா வருகிற 20ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 29ந் தேதி அதிகாலை 4மணிக்கு கோயிலுக்குள் பரணி தீபமும்¸ மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது. இதையொட்டி செப்டம்பர் 28ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனாவால் மாடவீதியை சுற்றி சாமி ஊர்வலங்கள் நடைபெறுவது ரத்து செய்யப்பட்டு கோயிலுக்குள் மட்டுமே உற்சவங்கள் நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற திருவிழாக்களில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படவில்லை.
தீபத்திருவிழா எப்படி நடைபெறும்? பக்தர்களுக்கு அனுமதி உண்டா?என்பதை தெரிந்து கொள்வதில் உள்ளுர் பக்தர்கள் முதல் கொண்டு உலக பக்தர்கள் வரை ஆர்வமாக உள்ளனர். டாஸ்மாக்¸ வணிக நிறுவனங்களை திறந்து விட்டுவிட்டனர். திரையரங்கு¸ பள்ளி¸கல்லூரிகளை திறக்க உள்ளனர். இவைகளில் கூட்டம் சேரும் போதும்¸ போராட்டம்¸ பேரணி¸ கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் போதும்¸ பஸ்ஸில் நெருக்கி உட்காரும் போதும் பரவாத கொரோனா திருவிழாக்களில் பக்தர்களை அனுமதிக்கும் போது பரவுமா? என்ற கேள்வி பக்தர்கள் தரப்பில் இருந்து கேட்கப்படுகிறது.
 |
பைல் படம் |
ஆனால் தீபத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதால் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு 8 மாதங்களாக பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டதே உதாரணம் என கோயில் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தீபத்திருவிழா நடத்துவது குறித்த அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோயில் நிர்வாகத்திற்கு கோரிக்கை வந்ததையடுத்து கோயில் இணை ஆணையர் ஞானசேகர் இன்று சென்னை சென்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தீபத்திருவிழாவை மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் படி நடத்திட ஆணையர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஆலோசனை நடத்தி விட்டு இதற்கான அறிவிப்புகளை கோயில் நிர்வாகம் நாளை அல்லது 2 நாட்களுக்குள் வெளியிடும் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தீபத்திருவிழா தொடங்குவதற்கு குறுகிய காலமே இருப்பதால் அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் இருப்பது பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. இந்த வருட தீபத்திருவிழாவில் சாமி வீதி உலா¸ தேரோட்டம் ஆகியவை நடைபெறாது எனவும்¸ பக்தர்கள் இன்றி கொடியேற்றம் மற்றும் பரணி மற்றும் மகாதீப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கோயில் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related