உடற்பயிற்சி உபகரணங்கள்¸ நடைபாதை வசதி
குழந்தைகள்¸முதியவர்களுக்கு அனுமதி இல்லை
திருவண்ணாமலையில் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா சிவாச்சாரியார் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து விடப்பட்டது.
ரூ.3கோடியே 50 லட்சம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகம் அருகில் வேங்கிக்கால் ஏரி கரை ஓரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக மாநில நிதி குழு¸ ஊராட்சி ஒன்றிய பொது நிதி¸ கனிமங்கள் மற்றும் சுரங்கள் நல நிதி¸ சமூக பொறுப்பு நிதி ஆகியவற்றை பயன்படுத்தி ரூ.3கோடியே 50 லட்சம் செலவில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் அறிவியல் குறித்த அடிப்படை அறிவினை முறை சாரா வகையில் ஏற்படுத்துவதே இந்த பூங்காவின் முக்கிய நோக்கம் என்றும்¸ மாணவர்கள் கல்வி முறையில் அல்லாது விளையாட்டு முறையில் அறிவியல் சம்மந்தமான நுனுக்கமான விவரங்களை அறிந்து கொள்ளவும்¸ அவர்கள் எளிதில் அணுகும் வகையில் அறிவியல் உபகரணங்கள் திறந்தவெளியில் அமைக்கப்பட்டு மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை துண்டும் வகையிலும் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி உபகரணங்கள்
எந்திர பொறியியல்¸ ஒளி¸ ஒலி¸ வெப்பம்¸ இயற்பியல்¸ உயிரியல்¸ வான்வெளியியல் சம்மந்தமான அறிவியல் மாதிரி உபகரணங்கள்¸அரைவட்ட திறந்தவெளி அரங்கம்¸ குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள்,அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உடற்பயிற்சி உபகரணங்கள்¸ நடைபாதை¸ உணவுக் கூடம்¸ இருக்கை வசதிகள்¸ விலங்குகளின் மாதிரிகள்¸ அழகிய வண்ணமயமான கண்கவர் சுவர் ஓவியங்கள் ஆகியவை இந்த பூங்காவில் இடம் பெற்றுள்ளன.
கடந்த பிப்ரவரி 6ந் தேதி இந்த பூங்காவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திருவண்ணாமலைக்கு நேரில் வந்து திறந்து வைத்தார். திறந்து வைத்ததோடு சரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படவில்லை. அதன்பிறகு கொரோனா வைரஸ் தாக்கத்தால் பூங்கா திறக்கப்படவில்லை.
சிறப்பு பூஜை
இந்நிலையில் இந்த அறிவியல் பூங்காவை பயன்படுத்திக் கொள்ள இன்று (11.11.2020) முதல் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கந்தசாமி அறிவித்தார். இதையொட்டி இன்று மாலை அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பூங்கா திறக்கப்பட்டது. இதில் கலெக்டர் கந்தசாமி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா. ஜெயசுதா¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார்¸ துணை ஆட்சியர் (பயிற்சி) அஜீதா பேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குழந்தைகளுக்கு அனுமதி இல்லை
பிறகு கலெக்டர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது¸ அறிவியல் பூங்காவிற்குள் செல்ல காலை 6 மணி முதல் 9 மணி வரை¸ மாலை 4 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இங்கு வரும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்ட பிறகே பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்¸ சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மேலும்¸ 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்¸ 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படாது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பூங்காவிற்குள் உணவுப் பொருட்கள் எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. குடிதண்ணீரை பொது மக்களே எடுத்து வர வேண்டும். பூங்காவிற்குள் எங்கும் எச்சில் துப்பக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சாகச நிகழ்ச்சி
ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நடை பாதை¸ உடற்பயிற்சி உபகரணங்கள்¸ குழந்தைகள்¸ மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள்¸ உணவுக் கூடம்¸ அறிவியில் உபகரணங்கள் உட்பட அனைத்து இடங்களையும் பார்வையிட்ட கலெக்டர் கந்தசாமி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சி¸ சிலம்பாட்டம்¸ பறை ஆட்டம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தார்.
அப்போது கலெக்டர் கந்சாமியுடன் பொது மக்கள்¸ மாணவர்கள்¸ இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இறுதியாக ஏரிக்கரை அருகில் கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. திறப்பு விழா நடைபெற்று 8 மாதத்திற்கு பிறகு பூங்கா திறக்கப்பட்டுள்ளது சிறுவர்¸ சிறுமியர்களை குஷியடைய வைத்துள்ளது.