64-வது தேசிய பள்ளிக் கல்வி குழும விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற திருவண்ணாமலை வி.டி.எஸ். பள்ளி மற்றும் அரசு பள்ளி மாணவிகளுக்கு முதலமைச்சரின் உயர் ஊக்கத்தொகையான ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கடந்த 2018-2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 64-வது தேசிய பள்ளிக் கல்வி குழும விளையாட்டு போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பாக மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவிகள் சாதனை
இதில் திருவண்ணாமலை பகுதி மாணவிகள் சாதனை படைத்தனர். தடகள விளையாட்டில் பங்கேற்ற திருவண்ணாமலை வி.டி.எஸ். ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீவித்யா¸ கையுந்துப் பந்து விளையாட்டில் பங்கேற்ற சொரக்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்னேகா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். கோ-கோ விளையாட்டில் பங்கேற்ற மேல்பள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ர. பவித்ரா மூன்றாம் இடம் பிடித்தார். இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் உயர் ஊக்கத்தொகை விருது அறிவிக்கப்பட்டது.
அதன்படி மாணவிகள் ஸ்ரீவித்யா¸ ஸ்னேகா ஆகியோருக்கு தலா ரூ.1.50 லட்சமும்¸ பவித்ராவுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது. இந்த தொகையை மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம்¸ நடுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 21ந் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் வழங்கினார்.
8 மாணவர்களுக்கு மெடிக்கல் சீட்
மருத்துவ முகாமை துவக்கி வைத்து அவர் பேசுகையில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பயின்ற 8 மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகும் வகையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை கிடைத்துள்ளது.
93 கிராமங்களுக்கு மருத்துவ வசதி
முதலமைச்சர் தமிழகத்தில் ‘மினி கிளினிக்’ திறக்கப்படும் என அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவ வசதி இல்லாத கிராமங்களில் 93 ‘மினி கிளினிக்’ திறக்கப்படவுள்ளது. இக்கிளினிக்கில் ஒரு மருத்துவர்¸ ஒரு செவிலியர்¸ ஒரு உதவியாளர் பணியாற்றுவார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் 6 கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா சத்துணவு பெட்டகம்¸ ஒரு தாய்மாருக்கு 16 பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்¸ யானைகால் நோய் உள்ள 20 நபர்களுக்கு பராமரிப்பு பெட்டகம்¸ 3 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்¸ 20 வளர் இளம் பெண்களுக்கு சானிடரி நாப்கின் ஆகியவற்றையும் அமைச்சர் வழங்கினார்.
புதியதாக 4 ஆம்புலன்ஸ்
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நான்கு புதிய ‘108’ அவசரகால ஊர்திகளை கொடியசைத்து அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்¸ மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி¸ செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன்¸ இணை இயக்குநர் கண்ணகி¸ துணை இயக்குநர் அஜீதா¸ முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.