நொறுங்கிய கார் |
திருவண்ணாமலை அருகே கன்டெய்னர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் டிரைவர்¸ குழந்தை உள்பட மூன்று பேர் பலியானர்கள்.
பெங்களுரைச் சேர்ந்தவர் நிஷாந்த்(36). இவரது உறவினர் குமார்(36). இவர்களது சொந்த ஊர் பண்ருட்டி தாலுகா திருவாத்தூர் கிராமம் ஆகும். தீபாவளி பண்டிகையை கொண்டாட நிஷாந்த் தனது மனைவி சுகன்யா(32)¸ மகள்கள் கிருத்திகா(5)¸ தேவதர்ஷினி(2) ஆகியோருடன் காரில் புறப்பட்டு சென்றார். காரை குமார்(36) ஓட்டிச் சென்றார்.
திருவண்ணாமலை அடுத்த பாய்ச்சல் அருகே இன்று அதிகாலை 4 மணி அளவில் வந்த போது எதிரே பாண்டிச்சேரியிலிருந்து பெங்களுருக்கு கூரியர் பார்சல்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியும்¸ காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நிஷாந்த்தும்¸ அவரது மகள் தேவதர்ஷினியும்¸ காரை ஓட்டிச் சென்ற குமாரும் அதே இடத்தில் பலியானார்கள். நிஷாந்த்தின் மனைவி சுகன்யா மகள் கிருத்திகா ஆகியோர் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்தனர். கண்டெய்னர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரில் இடிபாடுகளில் சிக்கி பிணமானவர்களையும்¸ காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களையும் மீட்டனர். காயமடைந்த சுகன்யாவும்¸ அவரது மகள் கிருத்திகாவும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல் அதே மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிஷாந்த் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்ததாகவும்¸ குமார் சிலை செய்யும் தொழிலை செய்து வந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிகாலை நேரத்தில் கார் டிரைவருக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி கொண்டாட சென்றவர் மகளுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
👉 பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும் போது அதிக கவனத்தை செலுத்த வேண்டும்¸ தூக்கம் அதிகமாக உள்ள அதிகாலை நேரங்களில் கார் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் அல்லது குறைந்த வேகத்தில் காரை ஓட்ட வேண்டும் என்பதை பெரும்பாலானவர்கள் கடைபிடிப்பதில்லை. இதனாலேயே விபத்துகள் ஏற்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.