|
இந்த வருடம் கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கை பாதிக்கப்படாத வகையிலும்¸ அதே சமயம் கொரோனோ நோய் தொற்றினைகட்டுப்பாட்டில் வைத்திடவும்¸ தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்பட்சத்திலும்¸ அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2020-ம் ஆண்டு தீபத்திருவிழா நடத்தப்படும்.17.11.2020 முதல் 03.12.2020 வரை 29.11.2020 தீபத் திருநாள் தவிர தினந்தோறும் சுமார் 5000 பக்தர்களுக்கு மிகாமல் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திட கோவிலின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மகாதீபத்திற்கு அனுமதியில்லை
பக்தர்கள் http://www.arunachaleswarartemple.tnhrce.in/ என்ற திருக்கோவில் இணையதளத்தில் e-registration மூலமாக ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து அதனடிப்படையில்¸ உரிய அடையாள அட்டையுடன் 29.11.2020 தீபத் திருநாள் தவிர கோயிலின் உள்ளே சுவாமி தரிசனம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி திருவீதி உலா கோவில் வளாகத்திற்குள் ஆகம விதிகளின்படி நடத்தப்படும். மகா தீபமான 29.11.2020 அன்று பொதுமக்கள்¸ பக்தர்கள் கோயிலின் உள்ளே சுவாமி தரிசனம் செய்யவும்¸ மலை மீது ஏறி மகாதீபத்தினை தரிசனம் செய்திட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீபத்திருவிழா நிகழ்ச்சி நிரலை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 26.11.2020 அன்று கோவில் வளாகத்தின் வெளியே உள்ளே மாடவீதிகளில் பராம்பரியமாக நடைபெற்று வந்த அண்ணாமலையார் மகா ரத தேரோட்டம் உள்ளிட்ட 5 தேரோட்ட நிகழ்வினையும்¸ கோவில் வளாகத்தின் உள்ளேயே ஆகம விதிகளின்படி நடத்தப்படும் என கலெக்டர் அறிவித்திருந்த நிலையில் கோயில் நிர்வாகம் வெளிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் தேரோட்டம் பற்றிய விவரம் அறிவிக்கப்படவில்லை. அதற்கு பதில் அன்று காலை பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடைபெறும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 25.11.2020 இரவு நடைபெறும் வெள்ளிரதம் குறித்த விவரமும் அதில் இடம் பெறாமல் இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல் விவரம்
17.11.2020 செவ்வாய் இரவு அருள்மிகு துர்க்கையம்மன் உற்சவம் (துர்க்கையம்மன் திருக்கோயில் வளாகத்தில் நடைபெறும்)
18.11.2020 புதன் இரவு பிடாரி அம்மன் உற்சவம்.
19.11.2020 வியாழன் இரவு விநாயகர் பூஜை¸ வாஸ்து சாந்தி¸ ம்ருத்ஸங்கிரஹண மண் எடுத்தல்¸ விநாயகர் உற்சவம்.
20.11.2020 வெள்ளி கார்த்திகை தீபம் 1-ம் நாள் திருவிழா விடியற்காலை 5.30 மணிக்குமேல் 7.00 மணிக்குள் விருச்சக லக்னத்தில் கொடியேற்றம். காலை பஞ்சமூர்த்திகள் உற்சவம். இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவம்.
தொடர்ந்து 21.11.2020 முதல் தினமும் காலை வினாயகர்¸ சந்திரசேகரர் உற்சவம். இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடக்கிறது. 22.11.2020 ஞாயிறு காலை 3-ம் நாள் திருவிழாவில் 1008 சங்காபிஷேகமும்¸ 25.11.2020 புதன் 6-ம் நாள் திருவிழாவில் காலை 63 நாயன்மார்கள் உற்சவம்¸ 26.11.2020 வியாழன் தேரோட்டம் நடைபெறும் 7-ம் நாள் திருவிழாவில் காலை பஞ்சமூர்த்திகள் உற்சவமும்¸ 27.11.2020 வெள்ளி 8-ம் நாள் திருவிழாவில் மாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறுகிறது.
29.11.2020 ஞாயிறு 10-ம் நாள் திருவிழா விடியற்காலை 4.00 மணிக்கு பரணி தீபம் உற்சவம்¸ மதியம் சுப்ரமண்யர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம். மாலை 6.00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள்¸ அர்த்தநாரீஸ்வரர் காட்சி¸ அண்ணாமலை ஜோதி தீப தரிசனம் இரவு அவரோஹணம் (கொடியிறக்கம்) பின்பு இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவம்.
கோயிலுக்கு வெளியே அய்யங்குளத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த தெப்பல் திருவிழாவிழா கோவில் வளாகத்தினுள் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 30.11.2020 திங்கள் முதல் நாள் சந்திரசேகரர் தெப்பல் உற்சவமும்¸ 01.12.2020 செவ்வாய் இரண்டாம் நாள் பராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும்¸ 02.12.2020 புதன் மூன்றாம் நாள் சுப்ரமண்யர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.
03.12.2020 வியாழன் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
கோர்ட்டில் வழக்கு
கார்த்திகை தீபத்திருவிழாவை வழக்கம் போல் நடத்த வேண்டும் என விசுவ இந்து பரிஷத் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் வரும் உத்தரவை பொறுத்து திருவிழா உற்சவ இடங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் மாற வாய்ப்புள்ளது.