Homeஆன்மீகம்தீப விழா இலவச தரிசன பதிவு தொடங்கியது

தீப விழா இலவச தரிசன பதிவு தொடங்கியது

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று தொடங்கும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான பக்தர்கள் இலவச தரிசனத்திற்கான பதிவு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

20ந் தேதி கொடியேற்றம் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரலாற்று சிறப்பு மிக்க கார்த்திகை தீபத்திருவிழா இன்று (17.11.2020) இரவு துர்க்கையம்மன் திருக்கோயில் வளாகத்தில் துர்க்கை அம்மன் உற்சவத்தோடு தொடங்குகிறது. 20ந் தேதி வெள்ளிக்கிழமை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை விநாயகர்¸ சந்திரசேகரர்¸ இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவங்கள் அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் நடக்கிறது. 

3.12.2020  சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகன உற்சவத்தோடு 17 நாட்கள் இந்த தீபத் திருவிழா நடைபெற உள்ளது.

கொரோனோ நோய் தொற்றினை கட்டுப்பாட்டில் வைத்திடவும்¸ தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதினாலும் தீபதிருவிழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி சாமி வீதி உலா¸ தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டு அதற்கு பதில் கோயில் வளாகத்தில் சாமி உற்சவங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மலையேற¸கிரிவலம் செல்ல தடை

மகாதீப நாளான 29.11.2020 அன்று பொதுமக்கள்¸பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலின் உள்ளே சுவாமி தரிசனம் செய்யவும்¸ மலைமீது ஏறி 2668 அடி உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தினை தரிசனம் செய்திடவும்  பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும்¸ 29.11.2020 மற்றும் அதனை தொடர்ந்து 30.11.2020 அன்று வரப்பெறும் பவுர்ணமி நாளன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். மேலும் தீபத்திருவிழா காலங்களில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதைகளில் அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்தே அண்ணாமலையார் மலை உச்சியின் மீது ஏற்றப்படும் தீபத்தினை தரிசனம் செய்திடுமாறும்¸ நகரின் எந்தவொரு பகுதியிலும் தேவையின்றி கூடாமலும்¸ கூட்ட நெரிசல் ஏற்படுத்தாமலும் தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

5ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

இந்நிலையில் இன்று முதல் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அடையாள அட்டை அவசியமாகும். இதற்காக ஆன்லைன் பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. 17.11.2020 முதல் 03.12.2020 வரை 29.11.2020 தீபத் திருநாள் தவிர தினந்தோறும் சுமார் 5000 பக்தர்களுக்கு மிகாமல் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திட அனுமதிக்கப்பட உள்ளனர். நுழைவு சீட்டு உள்ளவர்கள் மட்டுமே 29.11.2020 தீபத் திருநாள் தவிர கோயிலின் உள்ளே சுவாமி தரிசனம் செய்திட அனுமதிக்கப்படுவார்கள்.

சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in என்ற திருக்கோயில் இணையதளத்தில் e-registration மூலமாக ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

குழந்தைகள்¸ முதியவர்களுக்கு அனுமதியில்லை

நுழைவு சீட்டு பெறும் பக்தர்களுக்கு கீழ்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 
1.59 வயதுக்கு மேற்பட்ட நபர்கள்¸ நோய் தொற்று உள்ளவர்கள்¸ கர்ப்பிணிப் பெண்கள்¸ 11 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை மற்றும் அவர்கள் வீட்டிலேயே தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
2. முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே திருக்கோயிலின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
3. இந்த டிக்கெட் சுவாமி தரிசனத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது திருக்கோயிலின் மற்ற பண்டிகை நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.
4. திருக்கோயிலின் உள்ளே நுழையும் பொது ஆதார் அட்டை நகல் அவசியம்.
5. பக்தர்கள் பாரம்பரிய உடை மட்டுமே அணிந்து வர வேண்டும். ஆண்: வேட்டி¸ சட்டை¸ குர்தா¸ பைஜாமா¸ பேண்ட். 
பெண்: சேலை¸ தாவணி¸ சுடிதார் (துப்பட்டாவுடன்).
6. ஆன்லைன் டிக்கெட் பரிசோதனை செய்யும் இடம் : கிழக்கு இராஜ கோபுரம் நேரம்: டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் நேரத்தை விட 15 நிமிடத்திற்கு முன்பாக வர வேண்டும்¸ காலதாமதம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
7. திருக்கோயிலின் நுழைவாயிலில் கிருமி நாசினி மற்றும் உடல் வெப்ப பரிசோதனை கருவி வைக்கப்பட்டிருக்கும். மேலும் பக்தர்கள் பரிசோதனைக்கு பின்னர் நோய் அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
8. சிலைகளை தொட அனுமதியில்லை. மேலும் பக்தர்கள் வரிசையில் நிற்கும் பொது சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

error: Content is protected !!