Homeசெய்திகள்சோலார் இஸ்திரி வண்டி-எஸ்.கே.பி. மாணவி சாதனை

சோலார் இஸ்திரி வண்டி-எஸ்.கே.பி. மாணவி சாதனை

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பள்ளி மாணவி சாதனை

உலக அளவில் முதன்முறையாக சோலாரில் 

இயங்கும் இஸ்திரி வண்டி கண்டுபிடிப்பு 

ஸ்வீடன் நாட்டின் ரூ. 8.5 லட்சம் பரிசுத்தொகையுடன் 

மத்திய அரசின் உயரிய விருது அறிவிப்பு 

திருண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் வானவில் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் உமாசங்கர். ஆன்லைன் ஆலோசகர். இவரது மனைவி சங்கீதா திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. வனிதா சர்வதேசப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் வினிஷா. அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தவர்

கடந்த 2018ம் ஆண்டு பள்ளியில் இருந்து வினிஷா வீட்டிற்கு திரும்பிய போது சாலையில் இஸ்திரி கடைக்காரர் ஒருவர் கரித்துண்டுகளை பரப்பி வைத்துள்ளதை பார்த்தார். பிறகு வீட்டிற்கு சென்று விட்டு வெளியில் வந்த போது பயன்படுத்திய கரியை அந்த கடைக்காரர் குப்பையில் கொட்டியதை பார்த்தார். திருவண்ணாமலை மட்டும் அல்ல உலகம் முழுவதும் இஸ்திரி பெட்டிக்கு கரியை பயன்படுத்துவதால் இதற்கு மாற்று என்ன என்று கடந்த 7 மாதங்களாக சிந்தித்து சூரிய ஒளியில் இயங்கும் நடமாடும் தன்மை கொண்ட இஸ்திரி பெட்டியுடன் கூடிய வாகனத்தை கண்டுபிடித்தார்.

இது குறித்து மாணவி வினிஷா கூறியதாவது¸ 

ஆயிரக்கணக்கான மரங்கள் கரிக்காக வெட்டப்படுவது தடுக்கப்படுகிறது. எரிக்கப்பட்ட கரியை சுற்றுப்புறங்களில் கொட்டுவதால் நிலம்¸ நீர்¸ மற்றும் காற்று மாசுபடுவதும் தவிர்க்கப்படும். கரிக்காக மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஒரு மரம் தினமும் ஐந்து பேர்களுக்கான ஆக்ஸிஜனைத் தருகிறது. மரங்கள் வெட்டப்படுவதால் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. 

6 மணி நேரம் இஸ்திரி செய்யலாம்

நான் கண்டுபிடித்த சூரிய ஒளியினால் இயங்கும் இஸ்திரி வண்டியால் மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும். மழை பொழிவு ஏற்படும். காற்று மாசு படுவது தவிர்க்கப்படும். பருவநிலை மாற்றமும் தடுக்கப்படும். இந்த வண்டியின் மேல்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு¸ 100ஏ.எச் திறன்கொண்ட பேட்டரியை பயன்படுத்தி 6 மணி நேரம் வரை தொடர்ந்து இஸ்திரி செய்ய முடியும். இதற்காக 5 மணி நேரம் சூரிய ஒளியைக் கொண்டு சார்ஜ் செய்தால் போதுமானது. இந்த வண்டியை 6 மாடல்களில் தயாரிக்கலாம். ரூ.30ஆயிரத்திலிருந்து ரூ.40ஆயிரம் வரை முதலீடு செய்தால் போதுமானது. 7 முதல் 8 ஆண்டுகள் வரை இந்த வாகனத்தை கொண்டு இஸ்திரி கடைக்காரர்கள் பயன் பெறலாம்.

கடந்த 2019ம் ஆண்டு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் இக்நைட் விருதை பெற்ற போது அவர்கள் ஸ்வீடன் நாட்டின் விருதுக்கு பரிந்துரை செய்தனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

 ரூ. 8.5 லட்சம் பரிசுத்தொகை

ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஸ்வீடன் நாட்டின் துணைப் பிரதமர் இசபெல்லாலோவிடமிருந்து இன்று இணையவழி நிகழ்வில் பட்டயம்¸ பதக்கம் மற்றும் ரூ. 8.5 லட்சம் பரிசுத்தொகை ஆகியவற்றை மாணவி வினிஷா பெற்றுள்ளார்.அவர் எஸ்.கே.பி. கல்விக் குழும தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார். அப்போது அவரை வெகுவாக பாராட்டிய கருணாநிதி பள்ளியில் வினிஷா படித்து முடிக்கும் வரை அனைத்து செலவுகளையும் பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் என அறிவித்தார். 

மாணவி வினிஷா பெற்றுள்ள 2020க்கான மாணவர் பருவநிலை விருதானது ஸ்வீடன்¸ ஐரோப்பா மாணவர் பருவநிலை அறக்கட்டளை மற்றும் டெல்கே¸ புளுஏர் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் வழங்கப்படுகிறது. மாணவர் பருவநிலை விருது என்பது உலக அளவில் சுற்றுப்புற சூழ்நிலையின் மீது அக்கறை கொண்ட பள்ளி மாணவர்களுக்கான ஒரு சர்வதேச பருவநிலை நிகழ்ச்சியாகும். இவ்விருது சுற்றுப்புறசூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தில் புதுமைகளை கொண்டு வர நினைக்கும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் ஒரு விருதாகும். சுற்றுச்சூழல்¸ பருவநிலை மற்றும் எதிர்கால தலைமுறைக்காக சிறந்த நடவடிக்கை எடுத்த 12 முதல் 17 வயதுடைய மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது¸ 

பருவநிலை பிரச்சினைகளுக்கு வருங்கால தலைமுறையினர் சொல்லும் புதிய தீர்வுகளை கண்டெடுக்க இவ்விருது 2016ல் துவக்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கொண்ட நடுவர் குழு இந்த ஆண்டு விருது பெறுபவர்களை தேர்ந்தெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழக முதல்வர் வாழ்த்து 

விருது பெற்ற மாணவிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி¸ மு.க.ஸ்டாலின்¸ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இந்த கண்டுபிடிப்பிற்காக மாணவி வினிஷாவுக்கு பாரத பிரதமரின் 18 வயதிற்குட்பட்டவரின் உயரிய விருதான பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் இன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் குடியரசு தினத்தன்று இந்த விருது ஜனாதிபதியால் வழங்கப்பட உள்ளது. 

உலக அளவில் திருவண்ணாமலைக்கு பெருமையை தேடித் தந்த மாணவி வினிஷாவுக்கு பாராட்டுகளும்¸ வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!