Homeஆன்மீகம்தீப விழா: தங்க கொடி மரத்தில் கொடியேற்றம்

தீப விழா: தங்க கொடி மரத்தில் கொடியேற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வரலாற்றில் முதன்முறையாக பக்தர்களின்றி நடத்தப்படும் தீபத்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது.

கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக இந்த வருடம் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்களின்றி நடத்தப்படுகிறது. மாடவீதியை சுற்றி சாமி ஊர்வலங்கள் நடத்த வேண்டும் என ஆன்மீக அமைப்புகள் வைத்த கோரிக்கைகள் நிராகரிப்பட்டன. கோயிலுக்குள் உள்ள 5ம் பிரகாரத்தில் சாமி ஊர்வலங்கள் நடைபெறும் என்றும்¸ இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபத்திருவிழா கடந்த 17ந் தேதி முதல் 19ந் தேதி வரை எல்லை காவல் தெய்வ வழிபாடுடன் தொடங்கியது. முதல் நாள் துர்க்கையம்மன் உற்சவமும், 2ம் நாள் பிடாரிஅம்மன் உற்சவமும்¸ 3ம் நாளான நேற்று  இரவு விநாயகர் உற்சவமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தீபத்திருவிழா தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றது. 

இதையொட்டி அண்ணாமலையார் உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரானை நடந்தது. இதனைத் தொடர்ந்து விநாயகர்¸ வள்ளி தெய்வாணை சமேத முருகர்¸ அண்ணாமலையார் உண்ணாமுலைஅம்மன் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அங்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 5-50 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க¸ 72 அடி உயர தங்க கொடிமரத்தில் பி.டி.சங்கர் சிவாச்சாரியார் கொடியேற்றினர். இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்¸ கலெக்டர் சந்தீப் நந்தூரி¸ முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி¸ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த்¸ திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி¸ அதிமுக மாவட்ட செயலாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி¸ மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி¸ கோட்டாட்சியர் ஸ்ரீதேவி¸ கோவில் இணை ஆணையர் இரா.ஞானசேகர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் ராஜன்¸கூட்டுறவு நகர்புற வங்கி தலைவர் டிஸ்கோ குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இன்று முதல் தினமும் காலை வினாயகர்¸ சந்திரசேகரர் உற்சவம். இரவு பஞ்சமூர்த்திகள் உற்சவம் நடக்கிறது. 22.11.2020 ஞாயிறு காலை 3-ம் நாள் திருவிழாவில் 1008 சங்காபிஷேகமும்¸ 25.11.2020 புதன் 6-ம் நாள் திருவிழாவில் காலை 63 நாயன்மார்கள் உற்சவம்¸ 26.11.2020 வியாழன் தேரோட்டம் நடைபெறும் 7-ம் நாள் திருவிழாவில் காலை பஞ்சமூர்த்திகள் உற்சவமும்¸ 27.11.2020 வெள்ளி 8-ம் நாள் திருவிழாவில் மாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறுகிறது.

29.11.2020 ஞாயிறு 10-ம் நாள் திருவிழா விடியற்காலை 4.00 மணிக்கு கோயில் கருவறைக்குள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பகல் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.  மாலை 6.00 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருளுகிறார். வருடத்துக்கு ஒரு முறை காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிக்க 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

அன்று பக்தர்கள் கோயிலுக்கள் செல்ல அனுமதி இல்லாததால் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்வுகள்¸ தொலைக்காட்சிகள்¸ உள்ளுர் கேபிள் டிவிக்கள்¸ திருக்கோயில் நிர்வாகம் மூலம் யூ டியூப் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!