திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி ஊர்வலத்தின் போது போலீசார்¸ பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
வரலாற்று சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. சாமி ஊர்வலங்கள் மாட வீதியில் நடத்தப்படாமல் கோயில் பிரகாரத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில்¸ நோய் தொற்று பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வழக்கம் போல் தேரோட்ட மற்றும் சுவாமி திருவீதியுலா வைபவம் நடத்த வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும்¸ பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்மந்தமாக விசுவ இந்து பரிஷத் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட நிர்வாகமும்¸ கோயில் நிர்வாகமும்தான் முடிவெடுக்க முடியும் என ஐகோர்ட்டு தெரிவித்து விட்டது.
கடுமையான நிபந்தனைகள்
ஆனால் கொரோனாவை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளை விதித்து விட்டது. வெள்ளித் தேர் மற்றும் தேரோட்டம் நடைபெறும் நாள் மட்டுமே லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்¸ மற்றபடி சாமி வீதி உலாவின் போது குறைந்த அளவு மட்டுமே பக்தர்கள் வருவார்கள்¸ பல தெருக்கள் மாடவீதிக்கு வந்து இணைகிறது. ராஜகோபுரம் அலங்கார மண்டபத்திலிருந்து சாமி ஊர்வலம் தொடங்குவதிலிருந்து முடிவடையும் வரை இடது புறம் 19க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதே போல் வலது புறம் 13க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. எனவே பக்தர்களை பரவலாக நிற்க வைத்து முக கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்¸ தேர் திருவிழாவை மட்டும் கோயிலுக்குள் வெள்ளித் தேரை பயன்படுத்தி நடத்திடலாம் என பல்வேறு தரப்பினரும் வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அதிக அளவு கூட்டம்
கோயிலுக்குள் வழக்கம்போல் சாமியை தரிசிக்க மட்டுமே குறிப்பிட்ட அளவு பக்தர்களை அனுமதிக்கின்றனர். சாமி உற்சவத்தை பார்க்க அனுமதி அளிக்கப்படவில்லை. சாமி உற்சவத்தை தரிசிக்க முடியாததால் பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு கோயிலுக்குள் கிளிகோபுரம் அருகில் சாமி உற்சவத்தை தரிசிக்க முயன்ற பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார்¸ பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சாமி தூக்க வருவதாக கூறி அதிக அளவு கூட்டம் கோயிலுக்குள் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது.
சாமி உற்சவத்தை பார்க்க முடியாத ஏராளமான பக்தர்கள் தினமும் மாடவீதியை சுற்றி வந்து அண்ணாமலையார் கோயில் முன்பு வணங்கி விட்டு செல்கின்றனர். அதில் ஒரு பக்தர் அண்ணாமலையார் கோயில் வரலாற்றில் முதன்முறையாக தேரோட்டத்தை ரத்து செய்தது வேதனை அளிப்பதாகவும்¸ பக்தர்களை அனுமதிக்காவிட்டாலும் பூரி ஜெகந்நாதர் தேர்திருவிழா நடந்தது போல் கோயில் பணியாளர்கள்¸ சாமி தூக்குபவர்களை கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் என தெரிவித்தார். தொற்றுநோய் பரவும் சமயத்தில் பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை நடத்த அனுமதி கொடுத்தால் பகவான் ஜெகநாதரே எங்களை மன்னிக்க மாட்டார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டார். ஜெகந்நாதர் கோயில் தேரோட்டத்தை பக்தர்கள் இல்லாமல் நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு அனுமதியும் வாங்கப்பட்டு விட்டது. அதே போல் இந்து அமைப்பினர் முன்கூட்டியே வழக்குகளை தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் தேரோட்டத்திற்கும் அனுமதி பெற்றிருக்கலாம் என கிரிவலப்பாதையில் ஆன்மீக பணியை செய்து வரும் அன்பழகன் என்ற பக்தர் கூறினார். இந்த தீப திருவிழாவில் தெய்வங்களை நேரில் காணமுடியாதது வருத்தத்தை அளித்துள்ளதாக பெண் பக்தர் ஒருவர் தெரிவித்தார்.
கோயிலுக்குள் உள்ள பக்தர்களிடம் கருத்து கேட்கப்பட்டதில் தடுப்புகள் வழியாக சாமியை தரிசிப்பது வேதனை அளிக்கிறது என ஒரு பக்தரும்¸ இதற்காகவாது அனுமதி அளித்தாற்களே, என்று சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான் என ஒரு பக்தரும்¸ இம்முறை தீபவிழாவில் கோயிலுக்குள் அதிக அளவு உள்ளுர் பக்தர் சென்று அண்ணாமலையாரை தரிசிக்க முடிந்தது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் ஒரு பக்தர் தெரிவித்தார்.
இந்நிலையில் மாடவீதியை சுற்றி தடுப்புகள் அமைத்து சாமி வீதி உலா நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முதலமைச்சருக்கு வேண்டுகோள்
இது சம்மந்தமாக திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது¸
திருவண்ணாமலை தீபத்திருவிழா என்பது தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து பல லட்சம் மக்கள் ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்வது பல நூற்றாண்டுகளாக நடைபெறுவது வழக்கம். அறநிலையத் துறையின் சார்பில்¸ தமிழக ஆலயங்களின் திருகுடமுழுக்கு விழாவினை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளதற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
“நினைத்தாலே முக்கி தருபவர் அண்ணாமலையார்” அப்படிப்பட்ட சிறப்புமிக்க திருத்தலம் திருவண்ணாமலை. இங்கு சித்தர்கள்¸ யோகிகள்¸ முனிவர்கள் மற்றும் ஆன்மீக அடியார்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற புண்ணிய பூமி. இப்படி பலசிறப்பு பெற்ற புண்ணிய பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணங்களை தங்களுக்கு கோரிக்கையாக சமர்ப்பிக்கின்றோம்.
புயல் வீசிய போதும்…
பன்னெடுங்காலமாக தொன்று தொட்டு நடைபெற்று வரும் பஞ்சமூர்த்திகளின் மாடவீதி உலாவானது¸ அடை மழை¸ புயல் வீசிய காலங்களில் கூட தடையின்றி நடந்தது. அப்படி இருக்க¸ இந்த ஆண்டில் திருமாடவீதி உலாவுக்கு தடைவிதித்திருப்பது¸ பக்தர்கள் மத்தியிலும்¸ வணிகர்கள் மத்தியிலும்¸ ஆன்மீக பெரியவர்களின் உள்ளத்திலும் தாங்க முடியாத அதிர்ச்சியினையும்¸ பெரும் மன வருத்தத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவிழாவிற்கு பல லட்சம் மக்கள் கூட வேண்டாமென¸தமிழக அரசு முடிவெடுத்திருந்தாலும்¸ திருவண்ணாமலையில் வாழ்கின்ற மக்களுக்காக¸ பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா நடைபெற அனுமதி தந்து மாடவீதி முழுவதும் தடுப்புகள் அமைத்து¸ பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து¸ இறையருள் பெற ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அண்மையில் பூரி ஜெகன்நாதர் தேர்திருவிழா அரசு விதிமுறைகளுக்கேற்ப நடைபெற்றது என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
பிறகு திருவண்ணாமலைக்கு இன்று வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் இந்த கோரிக்கை மனுவை அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.டி. தனக்கோட்டி¸ செயலாளர் பி.கந்தன்¸ பொருளாளர் ஏ.பி.எஸ்.பழனி¸ துணைத் தலைவர் வி.பானுசந்தர்¸ துணை செயலாளர் கே.ஞானவேல் ஆகியோர் அளித்தனர்.
செய்தி மற்றும் படங்கள் – எஸ்.செந்தில்