செண்பகத் தோப்பு அணை முன் அறிவிப்பின்றி திறக்கப்பட்டதால் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட சாத்தனூர் அணை¸ செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்ட குப்பநத்தம் அணை¸ மிருகண்டாநதி நீர்த்தேக்கம்¸ செண்பகத்தோப்பு அணை ஆகியவைகள் உள்ளன. இதில் செண்பகத்தோப்பு அணை கட்டப்பட்ட போது ஷட்டர்கள் பழதாகின.
இதையடுத்து கடந்த 2019ம் ஆண்டு 7 ரேடியல் ஷட்டர்களை புதியதாக பொருத்துவதற்கு ரூ.16.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய ரேடியல் ஷட்டர்கள் பொருத்தும் பணிகள் கடந்த 30.01.2020 அன்று துவங்கப்பட்டது. செண்பகத்தோப்பு அணையின் 7 ஷட்டர்கள் பொருத்தும் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் 30.10.2020 அன்று நடத்தப்பட்டது.
இந்நிலையில் “நிவர்” புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால்¸ செண்பகத்தோப்பு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் உயரம் 62.32 அடியில் 57 அடி நிரம்பியது. நீர் வரத்தும் 6000 கன அடியாக உயர்ந்ததால் அணையை திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு அதிகாரிகள் தள்ளப்பட்டனர்.
இதனால் இன்று செண்பகத்தோப்பு அணையிலிருந்து முதல் முறையாக புதுப்பிக்கப்பட்டுள்ள 7 புதிய ரேடியல் ஷட்டர்கள் மூலமாக 6000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. முன்அறிவிப்பின்றி அணை திறக்கப்பட்டதால் படவேடு¸ சாமந்திபுரம்¸ ராமநாதபுரம்¸ கமண்டலபுரம் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. திடீரென சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அணையை திறந்து வைத்தார். அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி¸ கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம்¸ உதவி ஆட்சியர் (பயிற்சிஅமீத்குமார்¸ பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஏ. மகேந்திரன்¸ உதவி செயற்பொறியாளர் ஏ. அறிவழகன்¸ உதவிப் பொறியாளர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
புதிய ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 287 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போளுர்¸ ஆரணி¸ வந்தவாசி¸ செய்யாறு மற்றும் ஆற்காடு வட்டங்களுக்கு உட்பட்ட 48 ஏரிகளின் மூலம் 7497.00 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்¸ நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் தேவையும் முழுமையாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆண்டு கால போராட்டம்
கமண்டல நதி எனும் துணை ஆறும் அமிர்தி அருகில் வரும் நாகநதி ஆறும்¸ ஆரணி அருகே இணைந்து¸ கமண்டல நாக நதி என உருப்பெற்று வாழைப்பந்தல் அருகில் செய்யாற்றுடன் இணைகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் அகலத்தில் செய்யாறு¸ ஆறாக வட கிழக்காக ஓடி¸ காஞ்சிபுரம் நகரை அடுத்த பழையசீவரம் எனும் ஊரில் பாலாறு நதிடன் இணைந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
கமண்டல நதி குறுக்கே செண்பகத்தோப்பு அணை கட்ட தி.மு.க. 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சியில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணி தொடரப்பட்டது. ரூ.34 கோடி மதிப்பில் அணை கட்டப்பட்டது.
இப்பணி 2001 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு¸ 2007 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. நிதியில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பணி தடைபட்டது. அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக பொருத்தப்பட்ட 7 மதகுகள் ரிப்பேர் ஆகவே முழு கொள்ளவுக்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. அதன்பிறகு¸ கடந்த 13 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மழை நீர் வீணாகும் சூழல் உருவானது. மதகுகளை சீரமைக்க கேட்டு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் பலனில்லை. இந்நிலையில்¸ கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி¸ரூ..10 கோடி மதிப்பில் அணை சீரமைக்கப்படும் என அறிவித்தார்.
ஆனால் பணிகள் நடைபெறவில்லை. இதனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் ஷட்டரை சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இல்லையெனில் 54 ஊராட்சிகளை சேர்ந்த 25 ஆயிரம் விவசாயிகளுடன் சேர்ந்து¸ படவேடு வீரக்கோயில் மைதானத்தில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்துவேன் என அதிரடியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செண்பகத்தோப்பு வரலாற்றில் முதன்முறையாக இன்று அணை திறக்கப்பட்டு விவசாயிகளின் 13 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.