Homeஆன்மீகம்திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் உச்ச கட்ட நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 20ந் தேதி முதல் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. 10வது நாளான இன்று பரணி மற்றும் மகாதீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. 

ஒன்று பலவாகி – பலவும் ஒன்றாகும்

பரணி தீபத்தின் ஒளியிலிருந்து பல விளக்குகளை ஏற்றி வைத்து பின் அனைத்து தீபத்தின் ஒளியையும் மாலையில் மகாதீபத்தில் ஒன்று சேர்க்கும் பாரம்பரியம் “ஒன்று பலவாகி – பலவும் ஒன்றாகும்’ என்பதை குறிப்பதாகும். பரணி தீபத்தையொட்டி இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம்¸ தீபாராதனை செய்யப்பட்டது. 

 பஞ்சமுக தீபம்

அதைத்தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்ககவசமும்¸ உண்ணாமலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவிக்கப்பட்டது. அண்ணாமலையார் சன்னதியில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத¸ சூரியன்¸ சந்திரன் மற்றும் பிரதோஷ நந்தி அமைந்துள்ள கருவறை ஆகிய பகுதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஏகனாக இருக்கிற இறைவன் அனேகனாகி (பஞ்சமூர்த்திகளாகி) படைத்தல்¸ காத்தல்¸ அழித்தல்¸ மறைத்தல்¸ அருளல் ஆகிய 5 வகை தொழில்களை செய்கிறார் என்பதை விளக்கும் வகையில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அனேகனாக இறைவன் இருந்தாலும் அவன் ஒருவனே என்பதை விளக்கும் வகையில் பஞ்சவிளக்கில் இருந்து ஒரே தீபமாக பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

அண்ணாமலையை நோக்கி 

அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை கீர்த்திவாச சிவாச்சாரியார் பரணி தீபத்தை ஏற்றினார். அதை கணேசன் குருக்கள் ஒவ்வொரு சன்னதியாக எடுத்துச் சென்றார். அம்மன் சன்னதி¸ விநாயகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. 

பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. வைகுந்த வாயிலில் இருந்து அண்ணாமலையை நோக்கி பரணி தீபம் காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்¸ மாவட்ட ஆட்சித் தலைவர்  சந்தீப் நந்தூரி¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த்¸ முன்னாள் ஆட்சியர் கந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் ராஜன்¸ மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத் தலைவர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி¸ முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுகவினர் முண்டியடிப்பு 

அமைச்சருடன் எந்த வித அடையாள அட்டையுமின்றி வந்த அதிமுகவினர் பரணி தீபம் ஏற்றப்படும் கோயில் கருவறைக்கு செல்ல முண்டியத்ததால் அவர்களுக்கும்¸ போலீசாருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

கொரோனா தொற்றை காரணம் காட்டி கார்த்திகை தீப திருவிழா வரலாற்றில் முதன்முறையாக பக்தர்கள் இன்றி பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம் போல் அரசு உயர் அதிகாரிகள்¸ அதிமுகவினர்¸ காவல்துறையினர் எந்த வித தடங்கலுமின்றி கலந்து கொண்டனர்.  

இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுக்கு ஐந்து நிமிடம் மட்டுமே காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!