திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கிரிமினல் சாதுக்களை பிடிக்க விரைவு தகவல் குறியீடுடன் கூடிய அடையாள அட்டையை வழங்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.தமிழகத்திலேயே முதன் முறையாக திருவண்ணாமலையில்தான் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான திருத்தலங்களில் தெய்வங்கள் மலைமேல் இருப்பதுண்டு. ஆனால் திருவண்ணாலையில் மலையே தெய்வமாகவும் வழிபாட்டிற்குரியதாகவும் உள்ளது. மலையில் உயரம் 2688 அடி ஆகும். மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் ஆகும். எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் அமைந்துள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. கிரிவலம் மேற்கொண்டால் நோய் நொடி இன்றி¸ பாவங்கள் விலகி மோட்சம் கிடைக்கும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று மலைவலம் வந்தும் அண்ணாமலையாரை தரிசித்தும் செல்கின்றனர்.
பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது போல் கிரிவலப்பாதையில் யார் உண்மையான சாது? யார் போலி சாது? என்று கண்டுபிடிக்க முடியாத அளவு சாதுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. பல்வேறு ஆசிரமங்கள் மூலமாக இவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் தொண்டு நிறுவனங்களும் இணைந்து கொண்டதால் 3 வேளையும் இவர்களுக்கு உணவுக்கு பஞ்சமில்லை. 1500க்கும் மேற்பட்ட சாதுக்கள் இங்கு இருப்பதாக ஒரு அமைப்பு கணக்கெடுத்துள்ளது. இவர்களில் 580 சாதுக்களுக்கு 2019ம் ஆண்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாதுக்கள் என்ற போர்வையில் சிலர் கஞ்சா மற்றும் மது போதையில் வசூல் வேட்டையிலும் இறங்கி விடுகின்றனர். இதில் சில சாதுக்கள் தர்மம் கொடுக்காதவர்களை திட்டி தீர்ப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். எல்லோரும் காவி உடையை அணிந்து பக்தர்களிடம் தர்மம் பெற்று வருகின்றனர். விசேஷ காலங்களில் இவர்களோடு ரயிலில் ஓசிப்பயணம் மேற்கொண்டு வந்து சேரும் வெளியூர் சாதுக்களும்¸ திருநங்கைகளும் சேர்ந்து விடுவதால் பக்தர்களின் பாடு திண்டாட்டம்தான்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சாதுக்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் ஊடுருவி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கிரிமனல் சாதுக்களை பிடிக்க காவல்துறை சார்பில் புது ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டது. அதன்படி சாதுக்களை கணக்கெடுத்து அவர்களுடைய கை ரேகை¸ அவர்களுடைய வீட்டு முகவரி¸ கிரிவலப்பாதை முகவரி என பல்வேறு ஆவணங்களை திரட்டி அவர்களது புகைப்படம் மற்றும் க்யு ஆர் கோடு(விரைவு தகவல் குறியீடு)டன் கூடிய அடையாள அட்டை வழஙக முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி நேற்று தொடங்கியது.
திருநேர் அண்ணாமலை கோயில் அருகே உள்ள சாதுக்கள் தங்கும் விடுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் இப்பணியை துவக்கி வைத்தார். இந்த க்யு ஆர் கோடு அடையாள அட்டையின் வாயிலாக சாதுக்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு உள்ளார்களா? அவர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பது தெரிந்து விடும். அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து கைது செய்யவும் காவல் துறை முடிவு செய்துள்ளது.
மேலும் வருகிற தீபத்திருவிழா மற்றும் பவுர்ணமி நாட்களில் காவல் துறை சார்பில் வழங்கப்பட்ட இந்த அடையாள அட்டையின்றி கிரிவலப்பாதையில் சாதுக்கள் போன்று யாரேனும் சுற்றி திரிந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கை பக்தர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது.