Homeஅரசு அறிவிப்புகள்திருமண மண்டபங்கள்- லாட்ஜ்களுக்கு கட்டுப்பாடு

திருமண மண்டபங்கள்- லாட்ஜ்களுக்கு கட்டுப்பாடு

 

திருவண்ணாமலையில் உள்ள திருமண மண்டபங்கள்¸ தங்கும் விடுதிகளில் தீபத் திருவிழாவையொட்டி 27ந் தேதி காலை வரை  நிகழ்ச்சிகள் நடத்தி கொள்ளலாம் என போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.  

திருவண்ணாமலையில் வருகிற  29ந் தேதியன்று நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி¸ கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, திருமண மண்டபம் மற்றும் மடத்தின் உரிமையாளர்கள்¸ தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கொரோனா தொற்று பரவல் இல்லாமல் கார்த்திகை தீபத் திருவிழா நடை பெறுவதற்கு ஏதுவாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. காவல்துறை சார்பில் தீபத்திருவிழா நாளுக்கு முன் மூன்று நாட்களுக்கு எந்தவித நிகழ்ச்சிகளும் வெளியூர் நபர்கள் தங்குவதற்கு அனுமதியும் அளிக்கக்கூடாது என்றும் அடுத்து நான்கு நாட்களில் பதிவு செய்தோர் விவரங்களை காவல் துறைக்கும்¸ வருவாய் துறைக்கும் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

திருமண மண்டப உரிமையாளர்கள் தரப்பில் வரும் 27.11.2020 ஆம் தேதி வரை சுபமுகூர்த்தம் இருப்பதால் அன்று மாலை வரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கொரோனா பரவல்¸ 144 தடை உத்தரவு மற்றும் கார்த்திகை தீபம் நாளில் அதிக அளவில் மக்கள் சேர்ந்து கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளதையும் கருத்தில் கொண்டு திருமண மண்டபம்¸ மடம் மற்றும் தங்கும் விடுதியில் 27.11.2020 அன்று காலை வரை நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இரவு 12 மணி வரை தங்கிக் கொள்ள அனுமதித்தும்¸ அதற்கு மேல் வெளியூர் நபர்கள் அனைவரையும் மடம்¸ திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி விட்டு வெளியேறிவிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. 

See also  சித்ரா பவுர்ணமி: தி.மலை கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து

மேலும் 28.11.2020 மற்றும் 29.11.2020 ஆகிய இருநாட்கள் எவ்வித நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்றும் அன்னதானத்திற்க்காக உணவு சமைக்கவும்¸ வழங்கவும்¸ உணவு பொருட்களை வெளியிலிருந்து பெறவும் தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!