திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வரலாற்றில் முதன்முறையாக கோயிலுக்குள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
“நினைத்தாலே முக்கி தருபவர் அண்ணாமலையார்” அப்படிப்பட்ட சிறப்புமிக்க திருத்தலம் திருவண்ணாமலை. இங்கு சித்தர்கள்¸ யோகிகள்¸ முனிவர்கள் மற்றும் ஆன்மீக அடியார்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற புண்ணிய பூமி. இங்கு தொன்று தொட்டு நடைபெற்று கொண்டிருக்கிற கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும்¸ ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுலில் உள்ளதாலும் பக்தர்கள் தரிசனத்திற்கும்¸ மாடவீதிகளில் சாமி தரிசனத்திற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்த காரணத்தில் பக்தர்களும்¸ பொதுமக்களும் தொலைக்காட்சி¸ யூ டியூப்¸ கோவில் இணைய தளம் வழியாக பரணி மற்றும் மகாதீபத்தை தரிசித்தனர்.
சிவனை குளிர்விக்க
கார்த்திகை மாதம் சிவபெருமான் அக்னியாக காட்சியளிப்பார். இம்மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால்¸ பிரம்மன் இருவருக்கும் சிவபெருமான் அக்னி வடிவமாக காட்சியளித்தார். எனவே கார்த்திகை தீபத்திருவிழா முடிவடைந்த மறுநாள் ஜோதி பிழம்பாக காட்சியளித்த சிவபெருமானை குளிர்விப்பதற்காக தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
இதையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. இந்த தெப்பல் உற்சவம் கோயிலுக்குள் வெளியே உள்ள ஐயங்குளத்தில் பாரம்பரியமாக நடைபெறுவது வழக்கம். கொரோனாவை காரணம் காட்டி இந்த தெப்பல் உற்சவத்தை அண்ணாமலையார் கோயிலுக்குள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்துக்கு மாவட்ட நிர்வாகம் மாற்றி விட்டது.
சந்திரசேகரர்
இதனால் இன்று இரவு அந்த பிரம்ம தீர்த்த குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. பிரம்ம தீர்த்த குள பகுதியில் விநாயகர்¸ சிவன்¸ அம்மன் உருவங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தெப்பலின் முன்பக்கம் வாழை மரங்கள் கட்டப்பட்டு பூக்களாலும்¸ வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்த தெப்பல் உற்சவத்தை குளத்தின் சுவர்களுக்கு பின்னால் நின்று பக்தர்கள் தரிசித்தனர். நாளை1ந் தேதி இரண்டாம் நாள் பராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும்¸ நாளை மறுநாள் 2ந் தேதி மூன்றாம் நாள் சுப்ரமண்யர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.
அண்ணாமலையார் கிரிவலம் நடைபெறாது
இதே போல் தீபதிருவிழா முடிந்து 2 வது நாள் அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த வருடம் கிரிவலம் ரத்து செய்யப்பட்டு கோயிலுக்குள்ளேயே சாமி வலம் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிவலப்பாதையில் சாமிக்கு மண்டகப்படி செய்பவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். பக்தர்களும் கொதிப்படைந்துள்ளனர்.
அண்ணாமலையார் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் வி.தனுசு¸ வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியை இன்று காலை சந்தித்து அண்ணாமலையார் கிரிவலத்தை அனுமதிக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இது குறித்து வி.தனுசு கூறுகையில் ஆகம விதிகளின் படி நடத்தப்பட வேண்டிய சாமி ஊர்வலங்களை கோயிலுக்குள் நடத்தி விட்டோம்¸ தெப்பலையும் கோயில் குளத்தில் நடத்தி விட்டோம் என கூறும் கோயில் நிர்வாகம், அண்ணாமலையார் கிரிவலம் செல்வதை மலையை சுற்றி தானே நடத்தியிருக்க வேண்டும்¸ கோயிலுக்குள்ளா மலை உள்ளது? எனவே கோயிலுக்குள் நடத்துவது எப்படி சரியாகும். இந்த விஷயத்தில் ஆகம விதிகள் பின்பற்றவில்லை என்பது வேதனையளிக்கிறது என்றார்.
பெரும் பிழை
வருடாவருடம் சுவாமி¸ அம்பாள்¸ துர்க்கையம்மன் தீபம் முடிந்து இரண்டாம் நாள் கிரிவலம் செல்வர். இது சுவாமியால் கூறப்பட்ட சத்தியம் என அருணாசல மஹாத்மியத்தில் இருக்கிறது. ஆனால் இந்த சத்தியத்தை உடைத்து நாளை கோவில் உள்ளே நடத்த போகிறார்கள். இது பிரமாண்டமாக தேர் போன்று இல்லாமல் மிகவும் எளிமையாக நடக்கும் உற்சவம்.செய்ய பல மாற்று வழிகள் இருந்தும் கொரனாவை காரணம் காட்டி நாளை உற்சவத்தை மாற்றி கோவிலில் நடத்துகின்றனர். மலையை சுற்றுவதை மாற்றி கோவிலில் எவ்வாறு நடத்தலாம். சுவாமி சொன்னதை மாற்றுவதற்கு இவர்கள் யார்? நாளை நடக்கும் இந்த பெரும் பிழையை நடத்துபவர்களை தடுக்காமல் இருக்கும் நம் அனைவரும் துணை போவதற்கே சமம். நாளை விதைக்க போகும் வினைக்கு அறுக்கப்படும் விதை நம் அனைவருக்கும் வந்து சேரும் என்பதில் ஐயமில்லை. என சமூக வலைத்தளங்களில் பக்தர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளனர்.