திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை வழக்கம் போல் நடத்திட விசுவ இந்து பரிஷத் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
19ந் தேதி கொடியேற்றம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா இந்த வருடம் வருகிற 29ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த செப்டம்பர் 28ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வழக்கம் போல் தீபத்திருவிழா நடைபெறும் என எதிர்பார்த்திருந்த அவர்களுக்கு பூர்வாங்க பணிகள் நடைபெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வருகிற 20ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்க உள்ள நிலையில் மூடப்பட்ட தேர்கள் திறந்து சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. இதனால் 7ம் நாள் திருவிழாவான தேரோட்டம் நடைபெறாது என தெரிகிறது.
பக்தர்கள் இன்றி…
மேலும் கடந்த 8 மாதங்களாக பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டதையும்¸ இதுவரை நடைபெற்ற திருவிழாக்களில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படாததையும் வைத்து பார்க்கும் போது பக்தர்கள் இன்றி தீபத்திருவிழா நடைபெற வாய்ப்புள்ளதாகவும்¸ மாடவீதியில் சாமி வீதி நடைபெறாது என்றும் கோயில் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி தகவல் பரவியதும் திருவண்ணாமலை நகர பிரமுகர்கள் வழக்கம் போல் தீபத்திருவிழாவை நடத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து கோயில் இணை ஆணையர் ஞானசேகர் சென்னை சென்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலோடு தீபத்திருவிழாவை நடத்திட அவரிடம் உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படியே தீபத்திருவிழா நடைபெற உள்ளது. இது சம்மந்தமாக மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்த உத்தரவும் கோயில் நிர்வாகத்திற்கு வரவில்லை என சொல்லப்படுகிறது.
விசுவ இந்து பரிஷத்
இதையடுத்து விசுவ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் ஏ.சக்திவேல் தலைமையில் அதன் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமியை இன்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது¸
இந்த ஆண்டு திருவிழா நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் திருவிழாவிற்கான பொது ஜென வெகு ஜென ஆலோசனை நடைபெற்றதாக தெரியவில்லை. தீபத்திருவிழா அழைப்பிதழ்¸ உபயதாரர் மற்றும் பொதுமக்கள் யாருக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. திருவிழாவிற்கான வாகனங்கள் பழுதுபார்த்து¸ பழுது நீக்கம் பணிகள் சுமார் மூன்று மாதம் முன் செய்யப்படும் பணிகள் இதுவரை செய்யவில்லை. இதனால் பக்தர்கள் இடையில் அதிருப்தி எழுந்து உள்ளது.
திருப்பதி கோயில்
இந்த கொரோணா நோய் காலத்திலும் ஓடிசா பூரி ஜெகனாதர் கோயில் திருதேர் விழா உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் அருகில் உள்ள குணசீலம் அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் சென்ற மாதம் 3ந் தேதி திருதேர் திருவிழா நடைபெற்றது. ஆந்திரா மாநிலம் திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயிலில் நாள்தோறும் சாமி வீதி உலா உடன் திருவிழாவும் நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் மைசூர் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோயில் தசரா திருவிழா நடைபெற்றது.
எனவே திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் சாமி வீதி உலா வருவதற்கு காவல்துறை தகுந்த பாதுகாப்புடன் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். திருவிழாவின் போது அரசாங்கத்தால் சிறப்பு பேருந்து¸ சிறப்பு ரயில்¸ இயக்குவதை தடைசெய்து திருவிழாவை அனைத்து மீடியாக்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்து மக்கள் அனைவரும் இல்லத்திருந்து சாமியை தரிசித்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் செய்யலாம்.
தடையில்லாமல்…
மேலும்¸ ஆகம விதிபடி வழக்கம் போல் இந்த ஆண்டும் சாமி வீதி உலா மற்றும் தீபதிருவிழாவை கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை செய்து கண்டிப்பாக நடைபெற செய்யவும். யுகம்¸யுகமாய் நடைபெறும் தீபதிருவிழாவை தடையில்லாமல் நடைபெற ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.